Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

பாம்பு நரம்பு மனிதன்

சோலைக்கிளி

தேசிய கலை இலக்கியப் பேரவை

------------------------------------------------------

பாம்பு நரம்பு மனிதன்

சோலைக்கிளி

முதற்பதிப்பு- ஜூன் 1995

அச்சு- சூர்யா அச்சகம், சென்னை- 41.

வெளியீடு- தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், 6/1, தாயார் சாகிப் 2வது சந்து, சென்னை- 600002

ரூ. 25-00

-------------------------------------------------------------

நரம்புகள்

என் பேனை ஓடிய கனவு

மன வாய் உணவுகள்

நானும் நண்டும் ஒரு தேர்தலும்

சிறுமரங்கள் தீயணைக்கும் மழை

என் காற்றுமுட்டை குடிக்காத வண்டு

பூனை மலம் கழித்த முகம்

வானம் பத்திரிகையான நான் போன புதுக்கிராமம்

உன் சிரிப்பென்ற மாயப்பொடி

பாம்பு நரம்பு மனிதன்

கொலையுண்ட என் மனம்

குருவிக்கு அறைந்ததும் பெண்ணின் கொண்டைப் பூவைச் சோதித்ததும்

என் ஆமை தவளை வாகனம்

பல்லியின் எச்சமாய் நான்

போக்கிரிகள் குதிரையோட்டும் நிலைமை

அந்தக் கிராமத்தை நினைத்து

என்மனம் என்னுடன் இருந்த இன்று

பொய்சொல்லி இன்று பூமரம் வாங்கியவன்

சப்பாத்துக்கள் பற்றிய எனது அபிப்பிராயம்

ஓய்வெடுக்கப்போன என் ஆறு

மாடு சப்பிய சூரியன்

முடிவு திகதியற்ற விண்ணப்பம் (புதிய ஒப்பனையாளர்களுக்கானது)

நின்று தூங்கும் நான்

மீன்களுக்காகப் பாடப் போன குயில்

காகத்தின் கால்மொழிக் கடிதம்

குருத்துக்கள் வாசி

என் அறைக்குள் விளக்கு வைக்க வந்தவளுக்கு

பைத்தியக்கார எருமைமாடு

வருவேன் என்று சொன்ன அவர்

கதிரையில் வந்தமர்ந்த பூமரம்

என் மாடு

பாரதியும் நானும் சாப்பிட்ட இரவு

அபிமானக் கவிஞனைத் தின்ற கரப்பான்

எனது உள்ளங்கையில் நான்

செத்த முகிலின் மழை

மனித நேயத்தின் வெளிச்சம்

என் கந்தோர் முழுமதி

நான் மடித்துவைத்த பிணம்

தூரம்போய்விட்ட எனது ஒற்றைக்கு

பொன் ஆற்றின் ஒரு கதை

ஆடுகள் உலகமே

நத்தை பறந்த கண்ணிமை இலை மரம்

பிச்சைக்கார வானம்

நான் சந்தோஷ்மாக இருந்த அன்று

அந்தக் காட்டுப் பூமரம்

காணாமல்போன அவனின் பாடல்

பல்லிகள் கத்தும் துயர்

நான் போகமுடியாத அயலூர்

மலங்கழிக்கும் பேய்க்காற்று

நானான உருண்டை

கடல் அழுத தலை வ்ர்ட்டிய பிணம்

உலகின் முள்ளந்தண்டில் ஒரு பாடல்

எனக்குள் விழுந்த எனக்குள் இருப்பவர்

என் காகங்களுக்காக

துள்ளி விளையாடும் மரணம்

அப்பாவிச் சனங்களின் சந்தை

நிலவிற்குள் பாலூற்றுபவன்

ஏழாவது உலகம் போனவன்

புனரமைக்கப்பட்ட கடலருகு ஊர்

அறையில் படுக்கும் மரங்கள்

சீறி ஓடாத வருங்கால மனித நதி

என்னை விட்டுவிலகிய நான்

-------------------------------------------------------------

எஸ். வி. ராஜதுரைக்கும்

என்னைப் புரியாத பலருக்கும்,

நான் உட்பட.

------------------------------------------------------------------

பதிப்புரை

'மீன் பாடும் தேன் நாடு' எனப் புகழ்பாடும் மட்டக்களப்பு மண்ணின் கவிஞர் சோலைக்கிளி அவர்களுடைய ஐந்தாவது கவிதைத் தொகுதியை வெளியிடுவதில் மகிழ்வடைகிறோம்.

மனிதநேயக் கவிஞன் சோலைக்கிளியின் கவிதைகள் மனிதத்துவம் பற்றிப் பேசும் எமது உள்ளங்களில் ஊடுருவிப் பாய்ந்து பல கேள்விகளை எழுப்புகின்றன.

'பாம்பு நரம்பு மனிதன்' என்ற இக் கவிதைத் தொகுதியின் விமர்சனங்களை திறனாய்வாளர்களிடமிருந்தும் கவிதைச் சுவைஞர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம்.

தேசிய கலை இலக்கியப் பேரவை

14, 57- வது ஒழுங்கை,

கொழும்பு- 6

20- 12- 94

-------------------------------------------------------------------------

என்னுரை

என்னுரையா! அப்படி ஓர் உரை அவசியம் தானா? இம்முறை அடித்த வெள்ளத்திற்குள் எத்தனை மரங்ங்கள் செத்தன! எத்தனை மண்புழுக்கள் மடிந்தன! போனமுறை கோடையிலும் மரங்கள் கருகின. இம்முறை மாரியிலும் அழுகின. எனக்கு ஒன்றுமே புரியவில்லை! ஆனால், ஒன்று புரிகிறது. எதுவும் அளவு கூடினால் ஆபத்து என்பது.

கடந்த வெள்ளத்துள் ஒருநாள் நீர் என் அறைக்குள் வந்துவிட்டது. என் புத்தகங்களையும் நனைத்தது. பிறகென்ன, அன்றிரவு முழுக்க நான் தூங்கவில்லை. தூங்க இடமுமில்லை. நிலமெல்லாம் நீர். என் புத்தகங்களை படுக்கின்ற கட்டிலில் அடுக்கி வைத்து அதற்குள் ஒன்றாக நானும் குந்தியிருக்க வேண்டியாகிவிட்டது.

வரவர தொல்லை கூடிக்கொண்டு போவதைப்போல தான் என்னால் இப்போது உணர முடிகிறது. வெளிக்கிட்டால் உடனடியாக வாகனங்கள் இல்லை. ஏதாவதொரு வாகனத்தில் தொற்றிக் கொண்டால் அது போய்ச்சேர கனநேரம் எடுக்கிறது. வானொலியைத் திறந்தால் பாட்டு இல்லை. பாட்டுப்போல ஏதேதோ ஒலிக்கிறது. ஓர் அறிவிப்பாளன் என்னைப் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறான் தமிழைத் தின்றபடி. இப்படித் தமிழை அவனும் இவனும் தின்னத் தின்ன, காட்டில் மரம் அழிந்ததைப்போல விறகு வெட்டி, ஊரில் அது குறைந்து விடுமோ என்ற அச்சம் மேலோங்கியபடியே இருக்கிறது. ஆனாலும், நான் நம்பவில்லை. அழகு தமிழுக்கு இறப்பு என்று இல்லை. அதை யார் கொன்றாலும், அதை யார் வளர்க்காது விட்டாலும், அது வளரும். அவ்வளவு சக்தியுள்ள மொழி அது.

நேற்று ஒரு பிச்சைக்காரன் வந்தான். பிச்சைக்காரனைக் கண்டால் எனக்கு ஓர் இரக்கம் வருவதுண்டு. அவனைக் கண்டும் இரங்கினேன். அவன் இரங்கவில்லை. என்னிடம் இருந்த ஒரே ஒரு நாணயத்தை எனக்கும் வையாமல் அவனுக்குக் கொடுக்க, அவன் கோபமுற்று தூக்கி எறிந்து விட்டுப் போனான், போதாமல். அன்றும் பூமரம் வாங்கிவிட்டுப் போயிருக்கிறான் ஒரு மனிதன். பொய் சொல்லி, என்னை அவனது ந்ண்பனென்று கதைவிட்டு நான் வீட்டிற்குள் இருக்க எனது தங்கையிடம்.

அக்கிரமங்களும் அடாவடித்தனங்களும் அதிகரித்த மாதிரித் தோன்றவில்லையா உங்களுக்கு? தேர்தலில் ஒருவனுக்கு ஒருவன் ஏசுகிறான், அவனவன் தனிப்பட்ட சங்கதிகளைக் கூறி. கட்சிகளின் கொள்கை என்னவென்று இன்னும் குடிமக்களுக்குத் தெரியாது. எனக்கும் இந்தமுறை ஒரு வாக்கு வந்தது. பிறகு சொல்லுகிறேன் அதை எப்படி... யாருக்கு... என்பதெல்லாம்.

பாம்பு நரம்பாகி ஒரு மனிதன் இருக்கின்றான். அது நாதான். சிலதை முண்டி விழுங்கி, பலதை விழுங்கவும் முடியாமல் துடிக்கின்ற இவனுக்கு, தமிழ் எழுதத் தெரியும். வேறென்றும் தெரியாது.

என்னுரை என்றால் என்ன?

ஓ... நான் எழுதிய படைப்பிலக்கியங்களைப் பற்றி தம்பட்டமடிப்பதா, இல்லை; தன்னைத் தாழ்த்திக் கொள்வதைப் போல மேதாவித்தனத்தை மறைத்து வைத்து நடிப்பதா?

எது!

இந்தப் பாம்பு நரம்பு மனிதனுக்கு இப்போது வருகின்ற அதிகமான புத்தகங்களைப் படிப்பதற்கே அருவருத்துப் போகிறது, அவைகளில் உள்ள முன்பக்கங்களைப் புரட்டிப் பார்க்கின்றபோது.

நான் அண்மையில் வாசித்த் ஒரு புத்தகத்தில் ஒருவன் எழுதுகிறான், "யார் எதைச் சொன்னாலும் நான் தயங்க மாட்டேன். இவை கவிதைதான். எனக்கு கவிதைகள் பற்றி ந்ன்கு தெரியும். அதன் கரையைக் கடந்தவன் நான்."

நான் குளித்துவிட்டு வருகின்றேன். காலையில், இன்னும் குளிக்கவில்லை. ஊத்தையும் புழுதியுமான இந்த உலகத்துள் ஆத்மாவை மட்டுமல்ல, இந்த உடம்பை சுத்தமாக வைத்திருப்பதே பெரிய காரியமாகப் போகிறது.

அன்புடன்

கிணற்றடியில் இருந்தபடி,

சோலைக்கிளி

374, செயிலான் வீதி

கல்முனை- 04

இலங்கை

01-04-1994

----------------------------------------------------------------

என் பேனா ஒடிய கனவு

இன்று,

கனவில் என்பேனை ஓடியது

இளைக்க இளைக்க.

அதைத் துரத்திப்

பல பாம்புகள் சென்றன.

ஆம், மிக நீண்ட பாம்புகள் சினந்தே

என் பேனையைத் துரத்தின.

மூடியைத் தரையில் கழற்றிவிட்டு

ஒரு பெரிய மரத்தில்

ஏறி நின்றது

என் பேனை

புறா மாதிரி.

துரத்தி வந்த பாம்புகள்

அந்த மூடியைக் கொத்தின,

ஆத்திரத்தில்.

என் இதயத்தில்

அந்த ஒவ்வொரு கொத்தும்

விண் விண் என விழ

நான் வாய்விட்டே கத்தினேன்.

என் பேனை என்னோடு

கண்களால் பேசியது.

"பாம்புகள் போகட்டும்,

அதுவரை படுக்கவும்"

என்று சொல்லி,

அந்த மரத்தின் பெரிய கிளையொன்றினுள்

என் பேனை புகுந்தது

நரிமாதிரி.

கெட்ட பாம்புகளுக்கு

என் பேனை புகுந்த சத்தம்

கேட்டிருக்க வேண்டும்.

உரத்துச் சீறிக்கொண்டே மரத்தில் தாவின

அத்தனை பாம்பும்.

அந்த மரத்தின் கிளைக்குள், இலைக்குள் நுழைந்து

என் பேனையைத் தேடின,

அவை.

என் பேனை

இப்போது

புயலாகவும், புயலின் கருவாகவும்,

மாறியே விட்டது;

அந்த மரம்கூடச் சாய.

------------------------------------------------------------------

மன வாய் உணர்வுகள்

எந்த வேளையிலும் உண்டுகொண்டே இருக்கின்றேன்

ஒரு வினாடிகூட என்வாய்

இருக்கவில்லை ஓய்வாய்.

பசுமாட்டின் இறைச்சியைப்போல

இத்த மலைகளை

நான் கடித்து இழுத்துத் தின்னத் தின்னக்

குறைவதைப் போன்றும் காணவில்லை.

கடலும் குடிக்கக் குடிக்க வற்றவில்லை.

தென்னைமரங்களை நான் முருங்கைகாயைக் கார்வதைப்போல

புயல் போல வந்து நான்

கார்ந்து எறிந்தும்

அவை குறைந்தாய்

தெரியவில்லை எனக்கு.

நீ இன்னும் நம்பவில்லை

தொடர்ந்து நான்

சாப்பிட்டுக்கொண்டே இருப்பதை!

மீன்கறி சமைத்து வெண் பாத்திரத்தில் சோறு

போட்டுக்கொண்டு தருகிறாய்,

தாயே;

நான் இடிமுழக்கத்திற்குள் பீங்கான் கழுவுகிற சத்தமாவது

உன் காதுகளுக்கு இதுவரை

கேட்கவே இல்லையா!

நட்சத்திரங்களைப் பொரித்துத் தருகிறது வெயில்

நீ சின்னமீன் பொரிக்கும்

விதம்போல.

அற்புதம், தாயே

நட்சத்திரப் பொரியல்

அற்புதம்!

நீ என்ன மீன் சமைத்துள்ளாய் இன்று!

இப்போது நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்

நிலவுப் பப்படமும்

பகல் பிடித்து சமைத்துவைத்து இரவுதரும்

சூரிய முள்ளின் சூப்பும்.

வேண்டாம் தாயே, சாப்பாடு, என்னை இந்த

தினுசுகளை உண்ணவிடு

மன வாயால்.

----------------------------------------------------------------

நானும் நண்டும் ஒரு தேர்தலும்

மணல்கள் எழுந்து கையடித்தன

அலை பூமாலை போட்டது.

எந்த வேட்பாளனுக்கு என்பதுதான்

எனக்குத் தெரியவில்லை.

காரணம்,

பார்வைக்குத் தெரியாத வேட்பாளர்கள் எல்லாம்

போட்டியிடும் ஒரு தேசம்

இது.

நான் கடற்கரையில் இனி இருக்க முடியாது.

வேறு எங்காவது ஒரு கிடங்குள் விழுந்து

மாய வேண்டும்.

ஊருக்குள் அடிக்கின்ற

தேர்தல் நாற்றம்

பொறுக்க முடியாது வந்தேன்,

என் மூக்கை

இந்தக் கடற்கரைக் காற்றில் கழுவிச் சுத்தமாக்க.

கெடுத்தான்,

யாரோ ஒரு கண்ணுக்குத் தெரியாத

வேட்பாளன் இங்கும்

திடீரென வந்தருளி.

நண்டும் தேடுகிறது அவனை...

மீன் நெஞ்சு மணத்த கடற்கரைக் காற்றைக்

கெடுத்த அவன்

அதன் கண்ணுக்கும் தெரியவில்லை,

கலங்கியேனும்.

அது

படித்த நண்டு.

தன் வாழ்க்கை முழுக்க தனது முழுப்பெயரை

சிறு பிசகும் இல்லாமல்

எழுதி எழுதி இந்தக் கடற்கரை மணலில்

திருத்தித் தெளிந்தது.

இம்முறையேனும் எம்மண்ணில் தேர்தலிலே நிற்கின்ற

வேட்பாளர் போலல்ல அது.

அது_

கனமும் காத்திரமும் உள்ளது,

"நண்டு" என்ற மூன்றெழுத்தை

இன்றும் நினைவுவைத்து எழுதிக்கொண்டே இருப்பது.

----------------------------------------------------------------------------------------------

சிறு மரங்கள் தீயணைக்கும் மரம்

ஆலாக்கள் இறந்து கனகாலம் ஐயையோ.

கோழிக்குஞ்சும்

கருகிக்கனகாலம்

வண்ணத்துப் பூச்சி

தலை உருட்டும் சிறுதும்பி

முழுவதையும் பொசுக்கி

ஊருக்கு நெருப்பு வைக்கும்;

வானமே நீ பாடாதே மழைப்பாட்டு,

தவளை இங்கில்லை;

மேளம் கொட்ட.

என் வீட்டின் கூரையிலே

ஆவி பறக்கிறது.

இந்த வெள்ளத்தின் மேல்வெள்ளம், வெள்ளத்தின் மேல்வெள்ளம்

வெள்ளம், வெள்ளம், ஒன்றின்மேல் ஒன்றாக

போராடும் மழைக்குள்ளே

ஊரே எரிகிறது.

குளிர்மழை, தேன்மழை, நான் விரும்பும் அழகுமழை

எல்லாம் நீங்கி, இப்போது விஷமழை!

நெழிய நிலத்திற்குள் மண்புழுவும் இல்லை;

அது பொசுங்கி

சாமபல் பறந்தது.

எல்லாம் அளவோடு இருந்தால்தான் அனைத்திற்கும்

நல்லது, இந்த

மழை மாதம் மாதம் மாதமாய்

கனத்துக் கனத்து

தீயாய் ஒழுக

உஷ்ணத்தைக் கூட்ட,

முழுமரமும் இப்போது தீயணைக்கும் படைவீரர்

ஆகி, வாகனத்துள்

பாய்வதற்கு ஆயத்தம்.

என் வீடெரிந்தால்

தப்பும்.

இனிச் சிறுமரமும்

தீயணைக்க.

-------------------------------------------------------------

என் காற்றுமுட்டை குடிக்காத வண்டு

தென்றல் கருக்கட்டி பூமரத்தில் இடறியது

நேற்று,

என் காற்றுமுட்டை குடிக்காது வண்டு!

வண்டு குடிக்காத காற்றுமுட்டை எல்லாமே

நேற்றிரவே பொரித்து

மேய்கிறது வாசல், அறை, மேசை, எனது

தலைமுடி, என்றெல்லாம்.

என் வளவு ஒரு பண்ணை!

வீடும், தலைமுடியும்,

அதுபோல்தான் காற்றுக்கு.

போன வாரமெல்லாம் ஒரு தென்றல் முகம் தேடி

நானும், என்னுடைய

மனமும் பட்ட விதம்

வண்டுக்குத் தெரியும்,

ஆனால் அது காட்டவில்லை.

வாசல் மலர்தான்,

பொறு கொஞ்சம் என்று சொல்லும்.

அரைகுறையாய்

இதழ் விரித்து வாய் உசும்ப.

அது சொன்ன விதம் போன்றே பொறுத்திருந்தேன் நாலைந்து

தினங்கள் தோல் வெந்து,

உடற்குளிரும் சூடேற.

நேற்றுத்தான் ஒரு

தாய்க்காற்றை விடியல்

என் வளவுக்குள் இருத்திச் சொல்லிவிட்டுப் போனது

இரு இங்கே இவன்

மலரில் சீவிப்போன்,

விரிகின்ற குருத்துக்களில்

வசிக்கும் திறனுள்ளோன்,

என்றெல்லாம் சிபார்சித்து!

கேட்டுத்தான் இருக்கிறது என்னருமைக் காற்று

அந்த அதிகாலை விடிவின்

கதையை.

என் வளவுக்குள் உடனே எனக்காகக் கருக்கட்டி

முட்டை இட்டுமல்ல,

பொரித்தும் காட்டியது

வண்டுக்கும் வாயிருந்தும் குடிக்காத ஒத்துழைப்பால்.

-----------------------------------------------------------------

பூனை மலங்கழித்த முகம்

பூனை மலங்கழித்த முகம்

இன்று.

நான் இன்னும் பல்தீட்டிக் குளிக்கவில்லை.

இந்த உலகத்தை நாதூக்கி வைத்திருக்கும் பாரம்போல்

நெஞ்சுக்குள் பெரியதொரு சுமை,

நடக்க முடியாது,

கால்கள் தடுமாறும்.

எழுந்து கதிரையிலே இருந்தாலும், கதிரைக்கு

ஆபத்து நிகழும்.

இன்னும் புரண்டு புரண்டே கிடக்கின்றேன், பூத்த

மலர்கள் வாடி வீழ

வாசலில் வயதேறி.

என் கட்டில்

பேசுகிறது,

இன்று என்பாரம் மிகவும் அதிகரித்து

விடிந்தும் எழும்பாமல்

மாலையாய் போகையிலும்

கிடக்கக் கிடக்க அதில்-

நொந்து

மரமென்ற நிலைமாறி மனிதனாய்.

மரத்திற்கும்

நோவு வந்தால்

மனிதனாய் வாய் திறக்கும்!

என் கட்டிலுக்கும் இன்று அதுதான் நடக்கிறது.

கத்துகிறது என்னுடைய கட்டில்

மிகவும் சத்தமாய்.

அடுத்த வீட்டுப் பெண்

வந்து ஜன்னலுக்குள்

நின்று பார்க்கின்றாள்.

எழும்பு

போய் எனக்கு

ஓய்வு தா

என்றெல்லாம்

சொல்லி வெடிக்கிறது மெத்தை.

------------------------------------------------------------------------------------------------

வானம் பத்திரிகையான நான்போன புதுக்கிராமம்

இவ்வளவு காலமும் நான் எங்கு இருந்தேன்,

பக்கத்து வீட்டில் ஒரு கட்டழகி

இருந்தும்

காணாத நிலையாக.

கவிஞனுக்கும் அழகிற்கும்

ஒரு தொடர்பு உண்டு.

அது இருக்கும் இடத்தில், அது அவனை இழுக்கும்.

இப்படித்தான் இழுத்ததுவோ இந்தக் கிராமத்திற்கு இன்று,

பூச்சி தும்பியைப்போல்

திட்டம் இடா விதமாக

பறந்து நான் வர.

கவிதை வெறும்

இனிப்பல்ல,

மந்திரமும் கூட.

நான் கவிஞனன்றிப் போயிருந்தால் அழகுணர்ச்சி இருக்காது.

இந்தக் கிராமமும்

என்னை இழுத்திருக்காது.

ஆலமரம் காவல்செய்யும் கிராமமிது.

நான் இன்று வரும்போது;

முகிலின் நெய்யில்

பயிர்கள் முடி நனைத்து

சின்னப் பற்கள் உள்ள சூரியனைக் கொண்டு

தலை வாரும் தருணம்.

பறவையெல்லாம், கண்ணால் கருவிசெய்து

நான் வந்த நேரம்தொட்டு

என்னை வண்ணப் புகைப்படமாய் பிடித்து

தள்ளுகின்றன ஏன்?

ஒரு பூவைக் கேட்டேன்,

அது இன்னொரு இதழை விரித்தபடி சொல்லியது;

இந்த ஊர்,

ஒரு சிறிய ஊர்.

வானமே இவ்வூரின் பத்திரிகை, எந்தச்

செய்தியையும் சொல்லும் சாதனம்.

இன்று அந்தியிலே

நீங்கள் வந்ததன் சிறப்புமலர் போட!

--------------------------------------------------------------------------

உன் சிரிப்பென்ற மாயப் பொடி

தங்கநகை சுற்றுகின்ற

பட்டுக் காகிதத்துள் மடித்தா

இல்லை,

வெயில் கொஞ்சம் குறைந்திருக்கும் பொதுநிறத்துப் பகலில்

நீ விரும்பி அணிகின்ற நீலநிற

பூப்போட்ட பூமணக்கும் சேலையுள்ளா

சிரிப்பை

மடித்து வைத்துவிட்டு வந்துள்ளாய் வீட்டில்!

நான் கடிதமாகிவந்து உன்வீட்டில் சீவிக்கும்

உனது இரகசிய

பொன்முலாம் பூசிய அந்தப்

பெட்டிக் கண்ணுள்ளா!

நீ இன்று

சிலந்தி வ்லைபின்னி, அதில் கொசுபட்டுத் தொங்கி

முகத்தை வைத்திருப்பது,

இந்தக் கந்தோர் நிலத்தின் அடிக்குப்போய்

மேலும் மேலும் புதையத்தான், சதைப்புஷ்பம்!

நீ சிரித்தால்

இக் கந்தோர்

ஆகாயம் போய் நிற்கும்.

அலுவலுக்கு வருகின்ற ஊர்மக்கள்

தேவ குதிரைகளில் ஏறிவந்து பணிமுடிப்பர்.

உன் சிரிப்பு எங்கே,

மணக்கும் அந்த

மாயப்பொடி எந்த

மணிக்குள் மூடி வைத்துவர இருக்கிறது!

கந்தோர் கட்டிடத்தின்

கூரை புதைகிறது.

அது இறங்கி முடிவதற்குள்

சொல்லு, நான்போய் எடுத்துவர காற்றாவேன்.

-------------------------------------------------------------------------------------

பாம்பு நரம்பு மனிதன்

வலி தாங்கமுடியவில்லை.

எனது கண்களை யாரோ ஒரு கல்லில் வைத்து

இன்னுமொரு கல்லால்

தட்டுகின்றனர்.

என் கண்

ஒவ்வொரு நாளுமே கெடுகிறது.

அது இருந்த இடத்தில்

பாம்புகள் நுளைகின்றன

எனக்குள்.

ஆம், என் நரம்புகளெல்லாம் இப்போது பாம்புகளா!

ஒவ்வொரு நரம்பும்

ஊர்வதைப் போலவும்,

நெஞ்சைக்

கொத்துதல் மாதிரியும்,

உணர்கிறேன்.

ஊரே

நான் பார்க்கும் உலகே

என் கண் தட்டும் மனிதரை

விழுங்கு!

கையிலொரு பூவோடு

பிறர் நெஞ்சை

தடவிச் சுகம் கொடுக்கும் மானிடராய்

மண்ணில் பிறக்க

தவம் செய்!

ஒரு நரம்பு

இப்போது

என் மூளையைக் கொத்துகிறது!

இன்று காலையில்தான் இந்தப் பாம்பு

எனக்குள்ளே வந்தது.

நேற்று முன்தினம்

இரு தரப்பிலும்

சுமார் நூருபேர்வரை மரணம் என்ற

பத்திரிகைச் செய்தியைப் பார்க்கையில்,

யாரோ என் கண்ணை

கல்லால் தட்ட

நுழைந்தது.

---------------------------------------------------------------------

கொலையுண்ட என் மனம்

காகங்களே

போய் விழுங்கள் கடலில்,

என் மனதில் குடியிருந்த தும்பியே, புழுவே,

விழுந்து இறவுங்கள் நெருப்பில்,

கொன்றுவிட்டார் என் மனதைன்

இலையாய், பூவாய், குருத்தாய்,

என் மனது

செத்துச் சுடு வெயிலில்!

என் மனதை வெட்டியவன்,

தன் பெண்டாட்டியை ஒருபோதும் வைத்திருக்கமாட்டான்

அவளையும் வெட்டுவான்,

குத்துவான், குடைவான்,

துண்டு துண்டாய் உடம்பை

அரிவான்.

தொப்புளைத்

துளைப்பான்.

அவளை அப்படியே அடுப்பில் வைத்து

நெருப்பு மூட்டி வறுப்பான்.

என் மனதை வெட்டியவன்,

தன் பிள்ளையைப் பச்சையுடன் தின்பான்,

அவன் தின்னாது போனாலும் அவன் பிள்ளை ஒரு நாளும்

நிம்மதியாய் இராது,

கூனாகி இடறும்.

முழங்கால் வரைக்கும் அவிந்து புழுத்தெறித்து

தவளை போல் துள்ளும்.

என் மனம்-

வானத்தை

புதுக் குருத்தாய்

கக்கி வளர்ந்த என் மனம்-

ஆம், கொலையுண்ட

சந்திப் பூவரசு!

விழுங்க கனவுகண்டு

-நாளும்

புதுப் புதுக்குருத்தாய்.

-------------------------------------------------------------------------

குருவிக்கு அறைந்ததும் பெண்ணின்

கொண்டைப் பூவைச் சோதித்ததும்

அடித்தாயே,

உன் கையானையைத் தூக்கி

அவன் முகத்தில்.

என்ன பிழைசெய்தான் அப்பையன்?

படிக்கின்ற மாணவன்.

போகும்போது சிறிது சத்தமிட்டான்.

உன் தலையைச்

சுற்றிப் பறக்கின்ற குருவிகள் போல்.

அது தவறா!

தவறென்றால்; ஏனந்த வெண்குருவி, பச்சை,

வாலில் சிவப்புக் கலந்தது, நீலம்,

மஞ்சல், இவற்றுக்கெல்லாம்

நிற்பாட்டி வைத்து அடிகொடுக்கவில்லை!

அந்தப் பிள்ளைக் குருவிக்கு அறைந்த

கொடூரனே கேள்;

அச் சத்தம்

அவன் வாயால் வந்ததல்ல.

சலசலத்து அவனுடம்புள் இருந்து ஓடும்

மீசை

முளைக்கின்ற இரத்தத்தின் ஒலி.

அவன் நெஞ்சுக்குள்ளால்

பொத்து வெளிவந்த கானம்.

இனிய கானம் ரசிக்காத நீயெல்லாம் படைவீரன்!

பாடித் திரியும்

பள்ளிக் குருவியை நிற்பாட்டித் தட்டுவதும்,

அழகுக், கோயில் புறாவின் கழுத்து மயிரை

நடுவீதி வைத்து நிறுத்திப் பிடுங்குவதும்,

பூனைக்கு உறுக்குவதும்,

தெள்ளுக்கு சீறுவதும்,

வீரனுக்கே அல்ல, கோழைக்கும் நம்பலாம்

இருக்காத தன்மைகள்.

நீ அன்று

ஒரு பெண்ணின் கொண்டைப்

பூவையும் சோதித்தாய்.

இன்று, குருவிக்கு அறைந்த கதைபோல்தான் அதுவும்.

----------------------------------------------------------

என் ஆமை தவளை வாகனம்

தவிட்டைக் கரைத்துவந்து வையுங்கள் இதற்கு.

வைக்கோலைக் கொண்டுவந்து கொட்டுங்கள்.

வாலைப் பிடித்து

ஒருதரம் முறுக்குங்கள்.

பின் பக்கம்

ஓர் ஈட்டிக் கம்பால்

குத்துங்கள் உஷாராகி நகரட்டும்.

வாகனமாம் இது!

நான் வேலைக்குத் தினசரியும் போய்வந்து ஒருநாளில்

ஒன்றரை நாள் செலவுசெய்யும்,

நாலு சக்கரத்துக் கழுதையென்றால், தகுதி

இதற்கு உயரும்.

பசுமாடு அதைவிட மேல்,

சொறி எருது என்று

குறிப்பிடுதல் பொருத்தமோ!

இல்லை,

அதுவும் இதற்கு மிகப்

பெரியதொரு கௌரவம்.

இந்த

எரிபொருளைக் குடித்து

புகையாக மல்ங்கக்கி

மண், எண்ணி எண்ணி உருளுகின்ற

புழுதி படிந்த வண்டிக்கு-

பிணம், பேயன்;

கண்ணயரும் தெரு வீடு,

வழிப்போக்கன் வந்து

கழிக்கின்ற ஒரு மறைப்பு,

நரை ஆமை,

தவளை,

என்றெல்லாம் சாடுவதே சிறப்பு.

இன்று காற்றுப்போய், குட்டி

ஈன்ற தெருநாயின்

வயிற்றைப்போல் ஒரு சக்கரம் உருமாறி

பயணத்தின் இடையில் போட்டது என்னை.

இனிநான் கரையேற

பகல் இரவு என்று நாலைந்து வந்து செல்லும்.

------------------------------------------------------

பல்லியின் எச்சமாய் நான்

என்னை விழுங்கியது பல்லி.

நான் அதன் வயிற்றுக்குள் இருந்தேன்

இன்னும் சில நாளில் அது இட இருந்த முட்டை

என் பக்கத்தில்

இருந்தது.

என்னை விழுங்கிச் சுமந்தபடியே ஏறியது

சுவரின் உச்சிக்கு

அப் பல்லி.

இடையில் இன்னொரு கொசுவையும் விழுங்கியது.

நான் இன்று

மிகவும் சிறுத்திருந்தேன்.

ஏன்?

இன்று நான் அவனுடன் கதைத்திருந்தபோது

சாடையாய் ஊர்வாதம் என்வாயால்

வழியத் தொடங்கியதே

அதை நினைத்து.

என் பல்லி என்னைச்

சமிபாடடையச் செய்வதற்காய்,

ஏறிப்போய் ஒரு வசதியான விளிம்பில்

படுத்துக்கொண்டது.

அதன் வயிற்றுக்குள் சரியான இரைச்சல்,

இட இருக்கும் முட்டைக்குள்

உயிரேறிக் கொண்டிருக்கும் கருவின் சத்தமும்

என் காதுக்குக் கேட்டு,

பின் நான்

சமிக்க சமிக்க

மறைந்துகொண்டே போனது.

அதிகாலையில் நான் கிடந்தேன்,

நேற்று நான் எழுதி மடித்துவைத்த தாளில்

பல்லியின் எச்சமாய்

மேசையில்.

--------------------------------------------------------------------------------

போக்கிரிகள் குதிரையோட்டும் நிலைமை

பிணத்தைக் கண்டும் மொய்ப்பதற்கு

நான்ந்ன்ன கொசுவா?

மனிதன் ஆன்!

கொஞ்சம் விலகித்தான் போவேன்;

சமூகமே உன்னைக் கண்டு,

மூக்கைப் பொத்தியபடி.

நேற்று இருந்ததைவிடவும்

இன்று நீ

அழுகி இருக்கிறாய்.

ஒத்துக் கொள்வாயா!

இன்றையவிட நாளை நீ

மேலும் சிதையலாம்.

அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்த வண்ணம்

இருக்கிறதே தவிர,

நோய் குறைந்து உயிர் கூடி

ஆரோக்கியம் பெறும் நிலைமை

இல்லை.

எப்படிப் பிணமே நான் உன்னை

நேசிப்பது?

ஒன்றுக்குள் ஒன்றாகக்

கலப்பது?

நானும் உனது ஓர் அங்கம் அது மெய்தான்.

இருந்தாலும்,

நான் சொல்லி நீ திருந்த வசதியில்லை உன் அமைப்பில்.

நான் வாழும் ஊரில்

உனது மூளையாக இருக்கிறது

ஒரு முண்டம்.

கற்றவனும் சிந்திப்பவனும் சாக்கடைக்குள் இங்கு.

போக்கிரிகள் உன்னில் குதிரையோட்டி ஆட்டுவதால்,

அவர்களையே நம்பி நீ மருண்டு களிப்பதனால்,

நான் ஒதுங்குவதை விடுத்து

வழி வேறில்லை;

உனக்குள் இருந்து கொண்டே.

-----------------------------------------------------------

அந்தக் கிராமத்தை நினைத்து

கட்டிலில் படுத்திருந்த நான்

எழுந்து துள்ளினேன்.

சுவரில் ஓடிப்போய் முட்டினேன்.

மேசையில் ஒருதரம் கையால் அடித்தேன்.

கதவுக்கு இரண்டு உதை கொடுத்தேன்.

தரையைக் குதிகாலால் இடித்தேன்.

கிட்ட இருந்த காகிதத்தைக் கிழித்து

எறிந்தேன்.

அப்பாவிக் கிராமம்!

பனியும் கூதலால் படுத்திருந்தபோது

சிதைக்கப்பட்ட ஊர்!

நிலவு, அந்தக் கிராமத்தில் இருந்து உயிர் தப்பி

என் வானத்தில் நின்றது.

அதனது உதட்டில்

இரத்தம் வழிய,

காற்று-

ஓடி வந்த ஓட்டத்தில்

களைத்து தண்ணீர் கேட்டது,

என்னிடத்தில்.

அந்தக் கிராமத்தின் குழந்தைகளை

பேய்கள் சப்பியதாக

நட்சத்திரங்கள் சொல்லிச் சொல்லி விழுந்தன

என் தலையில்.

ஒரு நாய்-

துயரத்தில்,

ஊழையிட்ட வேகத்தில்,

அதன் வயிற்றுக்குள், கருவறைக்குள், இருந்த குறைக்குட்டி

வழுக்கி வாய்க்குள்ளால் விழுந்தது தரையில்,

கட்டியாய்.

நான் வானத்தில் ஓங்கிப் பலமுறை குத்தினேன்.

சூரியனைக் காலுக்குள்

போட்டுக் கசக்கினேன்.

இந்தத் துயரிலும் உனக்கு மகிழ்ச்சியா

என்று என்றே

இரைந்த கடலை எரித்தேன்.

என்னில் இருந்த அனல்பட்டு அந்த

மாபெரிய விரிகுடா கருகியது, புகைந்து,

பனை ஓலைப் பாய்போல.

-------------------------------------------------------------

என்மனம் என்னுடன் இருந்த இன்று

எழுந்து துள்ளினேன்

கவிதை உதிர்ந்தது.

நான் ஓட ஓட வீதி எங்கும்

கவிதை விழுந்தது.

ஒரு மரத்தின் நிழலில் இருந்தேன்

என்னால் வழிந்த கவிதை

நிலத்தில் ஊறி

தமிழ் மணத்து மயக்கும் ஓர் ஆறு பாய்ந்தது

சீறி.

தோணி விட்டபடி வந்தது

கானா.

ஆனாவும் ஆவன்னாவும் அதில் பூப்பறித்து விளையாடிக்

களைத்தன.

மீயென்னா,

அந்த ஆற்றின் செழிப்பில் ஓரத்தில் முளைத்து

நின்ற புற்களில்

ஏறி ஏறிக் குதித்து மகிழ்ந்தது.

பாட்டுப் பாடியபடி குளித்தது

அந்த ஆற்றிலே

தேன் நிலவு.

மேகக் குமரிகள் வலையை வீசிப்

பிடித்த மீன்கள்

உயிருடன் துடிக்கத் துடிக்க,

கூவென்னா.

கீயென்னா.

பீயென்னா.

டூனா.

ம்மென்னா ஆற்றின் கரையெல்லாம் துள்ளித் திரிந்தது,

மிட்டாய் உண்ணும் குழந்தையைப்போல

விரலை

வாய்க்குள் விட்டபடி.

கோனாவும் தேனாவும்

ஆற்றில் மலர்ந்திருந்த வெண்டாமரையைத் தலையில்

சூடியபடி நின்றன,

ஆயுத எழுத்தைத்தேடி

காதலிக்க.

ஔவென்னா ஒரு கிழவியைப்போலதான் ஆற்றின் மறைவில்

காலை நீட்டி நெட்டி முறித்தது.

ச்சும் ப்பும்

அதனைப் பார்த்துச் சிரித்தன.

"மை" கிழட்டு ஆமையின் முதுகில் ஏறி அந்த

வட்டாரமெங்கும் வந்தது

வலம்.

வெண்கொக்கின் தோளில்

தொனா.

நான் இன்னும் இருந்தபடி!

மனிதர்கள் வாழும் சூழலில் இருந்ததைப்போல்

என்மனம் இன்று தொலையாமல் இருக்கிறது,

பஞ்சியால், மெத்தையாய், பூக்கள் மலரும்

திடலாய், குளிராய்.

-----------------------------------------------------------------

பொய்சொல்லி இன்று பூமரம் வாங்கியவன்

பொய்சொல்லி இன்று பூமரம் வாங்கிய மனிதன்

போய்விட்டான்.

என்னை மிகவும் நெருக்கமான நண்பனென்று

எனது உடன் பிறப்பிடம்

கதைவிட்டு

நான் மறைந்திருக்கவே,

அள்ளிக் கட்டிக் கிளைகளைப் போனவன்

இப்போது

வீடும் சேர்ந்திருப்பான்.

நான் இதுவரையும் சுணங்கி வருகின்றேன்,

வெளியில்.

அவள் என்னைக் கண்டு

அசடு

வழியக்கூடாது என்பதற்காக.

மழைக்காலம் வந்தால் சிலருக்கு மரம் வேண்டும்.

அதுவும் பூமரமாகவே.

கோடையில் அவற்றைக் கருகவைத்து வெயிலுக்கு

சாப்பாடு போடும் பழக்கம்

நம்மில் பலருக்கு

இன்னும் உண்டு.

இவனும்;

கோழிக்கு உணர்ச்சி வந்ததைப்போல

வந்தவன்தான்.

பொய்சொல்லி எனது கைகளையும், கால்களையும்,

தங்கையிடம்

குழைந்து குழைந்தே கறந்தெடுத்த பாவி

எங்கள் வீட்டை விட்டு வெளியேறிச் சிலநிமிடம்

செல்லும் முன்னர் இழந்திருப்பான்

விருப்பம்.

எது, எப்படித்தான் இருந்தாலும்;

முன் பின் பழக்கமில்லா ஒருவன்

என்னை நண்பனென்று எனது கரம், காலையுமே,

கொள்ளையடித்தான் இன்று;

நானோ

அவன்

நாணாமல் இருக்க

வீட்டிற்குள்.

----------------------------------------------------------------------------

சப்பாத்துக்கள் பற்றிய எனது அபிப்பிராயம்

சப்பாத்துக்களே கால்களுக்கு வசதி.

அழகும் கூட.

நாய் குரைத்துத் துரத்தினால் கூட

ஓடத் தேவையில்லை.

எட்டி உதைக்கலாம் நாய்க்கு.

சப்பாத்து அணிந்தால்

கால்களுக்கு தனிப்பலம்.

முள்ளைக் கசக்கிக் கொண்டு போவதுதானே சப்பாத்து!

நெல்லில் மிதிபட்டால்

உமி தெறிக்கும் ஒருபக்கம்.

வீதிகளில் கிடந்து

கால்களைக் குத்தும்

சின்னக் கற்களுக்குக் கூட

சப்பாத்து என்றால் பயம்.

அது ஏறினாலே

தவிடுபொடியாகும் அவை.

இந்த, நடக்கப்பழகிய மண்புழுக்களுக்கு சப்பாத்து இல்லாமல்

துள்ளி எழுந்து ஓட முடியவில்லை!

சப்பாத்து அணிந்தால்

ஓடுவதற்கும் வாய்ப்பு.

உன்னிப் பாய்வதற்கும் துணிச்சல் வரும்.

நான் அண்மையில் வாங்கிய சப்பாத்து

கறுப்பு.

சொண்டு உள்ளது.

முன்னர் வாங்கியதன் சிறிய சாயலும்

இல்லை.

மண்ணுக்குள் நெழியாமல்

தலைமுறையை மற்றி

இரும்பைத் தூக்கிப் போகின்ற மண்புழுவே;

கேட்டாயா,

சப்பாத்து பற்றிய எனது அபிப்பிராயத்தை!

--------------------------------------------------------------------

ஓய்வெடுக்கப்போன என் ஆறு

மூன்று நாட்களாய் எனக்குள் பாய்ந்த ஆறு

கொஞ்சம் ஓய்வெடுத்திருக்கிறது,

மலைக்குப் போய்வர.

நான் இப்போதுதான்

எல்லோர் போலவும் இருக்கிறேன்.

அந்த ஆறு

எனக்குள் இருக்கையில் நான்

எல்லோர் போலும் இருப்பதில்லை.

காலால் நடந்தாலும்;

வானத்தில் பறப்பது.

வீட்டில் இருந்தாலும்;

சந்திரனில் குளிப்பது.

அந்த ஆறு

தொடர்ந்து ஓடிய ஓட்டத்தில்

மூன்று தினங்களாய்

என் இதயம்

களைத்துச் சோர்ந்து விட்டது.

சிறிது ஓய்வு வேண்டாமா என் இதயம்

இளைப்பாற!

அந்த ஆறும் கூட.

இருந்தாலும்

எனக்கு

அந்த ஆறு இருப்பது மாதிரியே இல்லை.

உணர்வு,

பசிக்கிறது.

கண் சாதாரண காட்சிகளைக் காண

சலிக்கிறது.

மரத்தை மரம்மாதிரிப் பார்ப்பதில்லையே நான்

அந்த ஆறு இருந்தால்.

வீதி, வெறும் மணலாய் தெரியாது.

தங்கக் கட்டிகளைக் கொண்டு நசித்து

செப்பனிட்ட

ஒரு புதுமைபோல

முக்காற் பகலும், நுனி இரவும் சந்திக்கும்

அந்தி நேரங்களில் இருக்கும்.

அந்தச் செண்பகத்தின் கண்

எனக்குள், ஆறு இருந்தால் அழகு.

சிலநேரம் எரிச்சல் வரும்;

அது அந்த ஆற்றின் போக்கை ஒத்தது.

-------------------------------------------------------------------------

மாடு சப்பிய சூரியன்

சூரியனைச் சப்பியது மாடு.

வைக்கோலைத் தின்பதைப்போல அதன் கதிர்களை

மாடு கடித்தது.

நண்பகல் அளவிருக்கும்

அந்தப் பரந்த புல்வெளியில்

சூரியன் விழுந்து கிடந்தது.

எங்கும் இருட்டேதான்!

ஆனால், காகங்கள் அதன் முளையில்

குந்தி இருந்து கரைந்தன.

முதலில் ஒரு சிறுவன்தான் குதித்தான்!

பின்னர் ஒரு பெட்டையும் விழுந்தாள்!

ஆம், சூரியன் இருந்த ஓட்டையால் ஒரு சில

பிள்ளைகள் துள்ளிக் குதித்தன,

விளையாட்டாய்.

புல்வெளி எங்கும் ஏராளம் காகங்கள்.

உலகமே இருண்ட பயத்தில்

அவை அலறியிருக்கலாம்.

இன்னும் குறிவைக்கப்படாத ஓர் இளைய மாடு

ஓடி வந்தது,

சூரியன் கிடந்த இடத்தை நோக்கி.

தலையால் நாலு தட்டுத் தட்டியது,

சூரியனின் முதுகுப் புறத்தில்.

கொம்பால் ஒருதரம் புரட்டிப் போட்டது.

மண் அப்பியபடி கிடந்த சூரியனை

சாணம் அடித்துக்கொண்டே சப்பியது.

ஏராளம் காகங்கள்!

உலகம் இருண்ட பயத்தில்

அவை அலறியிருக்கலாம்.

----------------------------------------------------------

முடிவு திகதியற்ற விண்ணப்பம்

(புதிய ஒப்பனையாளர்களுக்கானது)

இந்தமாதிரி என்னுடைய தேசத்திற்கு

பல் விளக்கக்கூடாது.

முடி வெட்டுவதிலும்

புதுமை வேண்டும்.

சந்தனப் பொட்டு இந்தமாதிரி

வைக்கக்கூடாது.

கண்ணுக்கு மை

தீட்டுவதில் பிழையுண்டு.

என் தேசத்திற்கு

தொடர்ந்து

இந்தமாதிரி அலங்கோலமாக

சேலை உடுப்பிப்பவன்

விரைவில் ஓய்வுபெற வேண்டும்.

அவன் இடத்தை-

வடிவுச் சேலை, ஆம், மிகவும் நவீன

வடிவுச் சேலை,

கெட்டித்தனமாகத் தெரிவுசெய்து உடுப்பிப்போன்

நிரப்பல் முக்கியம்.

இப்போது பார்; என் தாய் நாட்டிற்கு

கவுண் அணிவிப்பவனின் ரசனையை!

பொருத்தமில்லாத அளவில்.

ஒத்துவரா நிறத்தில்.

முடி வெட்டுபவனின் இப்போதும் ஒரு பழைய

கத்திரியால் கொத்துகிறான்,

செழிப்புள்ள

என் தேசத்தின் தலை முடியை.

நாடு அணிந்திருக்கும் செருப்பைப்பார், உற்று

ஊதிய தோல் உள்ள

காலத்தைக் காட்டாத மொக்கு.

என் நாட்டை நன்கு பராமரிக்க, நவீனதாய் சோடிக்க

அது- சுய

இயல்பிற்குத் திரும்பும்வரை

புதிய ஒப்பனையாளர்கள் சிலர் வேண்டும்!

விண்ணப்பம் முடிவு திகதி அற்றது.

--------------------------------------------------------------------------

நின்று தூங்கும் நான்

நான் நின்று தூங்குகிறேன்.

என் கட்டிலில் கள்ளி விதைகள் விழுந்து

தினமும் முளைப்பதனால்.

நான் நின்றுகொண்டே குப்புறப் படுத்து

குறட்டையும் விடுகிறேன்.

இப்போதெல்லாம் நான் அவளைக் கனவில் காண்பது

நின்று தூங்கியபடியேதான்.

அன்றும் அவள் என் நின்று தூங்கலின்

கனவில் வந்தாள்,

கொண்டையில் என் முகத்தைப்போன்ற பூ

சூடியிருந்தாள்.

அன்று நான் நின்று தூங்கியபோது

வீரிட்டுக் கத்தினேன்.

இருட்டுக்குள் ஒரு பூதம் வந்து

ஏறி என் நெஞ்சில்

இருந்ததைப்போன்று இருந்தது.

என்னை அறியாமலே சிறுநீர் விட்டேன்,

நின்று தூங்கியபடியே.

நின்று தூங்குவதும் அவ்வளவு சிரமமல்ல.

எனக்குள் இருக்கின்ற புற்கள் எப்போதும்

மலர்வதைப்போலவே,

மலருகின்றன.

ஒரு குலைப் பூவை

மூன்றுபேர் முக்கி

தூக்க்கும் அளவுக்கு மிகவும் பாரமாய்.

----------------------------------------------------------------------------

மீன்களுக்காகப் பாடப்போன குயில்

என்னை நான் எறிந்தேன்,

ஒரு மரத்தில்.

நான் வெடித்துச் சிதறிய துண்டுகளில் இருந்து

மீன் குஞ்சுகள் உயிர்த்தன.

என் அழகிய குயில்

பூக்களில் எனக்கு

கடிதம் எழுதிவிட்டுப் போயிருக்கிறது,

கடலுக்குள் இருக்கும்

மீன்களுக்குப் பாட.

பூக்களில் எனக்கு கருங்குயில் எழுதிய புதிய பாஷையை

வாசித்துத் தெளிவாக விளங்க

பறந்த இளைய வண்ணத்துப் பூச்சிகளை

அழைத்தேன்,

ஆயிரத்துப் பதின்மூன்று மலர்களிலே மொத்தமாய்

கானக் குயில்

அந்த நெடிய கடிதத்தை

மிகவும் துயருடனே எழுதியிருக்கிறது.

"தலைக்கு மேலே போகிறது வெள்ளம்.

எறும்புகள் புல்லுத் தின்னுகின்றன.

போகின்ற போக்கைப்பார்த்தால் வரும் நாளில் நாம்

எறும்புப் பாலே பருக நேரிடும்.

இங்கிருக்க

விருப்பமில்லை எனக்கு.

கடலுக்குள் விழுந்து மீன்களுக்காய் பாட

முடிவுசெய்து போகின்றேன்.

ஒருகோடியே இருபத்திநாலுலட்சத்தி முப்பத்திநாலாயிரம்

தடவைகள் பாடும் அளவுக்கு

எனது குரலின் சிறிதளவை

உனக்காக ஒரு போத்தலில் ஊற்றி இந்த மரத்தின் குருத்தில்

வைத்துள்ளேன் எடு.

கழுதையின் வாய்க்குள் ஊற்றினால் கூட

என் பாட்டு வரும்."

வாசித்த வண்ணத்துப் பூச்சிகளும்

தங்கள் சிறகுகளில் இருந்த புள்ளிகளை அழித்தன

அழுது.

------------------------------------------------------------

காகத்தின் கால்மொழிக் கடிதம்

நீ தேவைக்காகவே கடிதம் எழுதுவாய்.

இடையில் சுகம் விசாரித்தோ,

நட்பைப் பேணியோ,

ஒரு கடிதம் எழுதவில்லை இதுவரை நீ

நினைத்துப்பார்!

இன்றும் எழுதியிருக்கிறாய்,

ஒரு தேவையை மையமாக வைத்து

விரல் தேய்ந்த

ஒரு காகம் கிழித்த மடல்.

நீ பேனாக்களைப் பூட்டிவைத்து எவ்வளவு காலம்!

எதையும் எழுதி

கிறுக்கி அனுப்ப எனில்,

விரல் தேய்ந்த,

அல்லது நகம் உதிர்ந்த,

காகங்களைத் தேடிப் போகிறதே, உன் நெஞ்சு

தமிழென்ன அவ்வளவு இழிவா!

நான் தேவைக்குப் பாவிக்கும் ஒருபண்டம் அல்ல.

மனம் வைத்தால்

நானும் மனம்வைத்து

என்னை அள்ளி வார்க்கின்ற ஒருவன்.

உறவுள்ளோர்.

தினம் நனைகின்ற தேன் குடம்.

எப்படி எழுதுவேன் இதற்கு நான் பதில்!

முழுமையாய் வாசிக்க,

படித்த காகமும் என்னிடம் இல்லையே,

இன்னுமொரு

காகத்தின் கால் மொழி அறிய!

------------------------------------------------------------------

குருத்துக்கள் வாசி

மரங்களின் குருத்துகளில்

தலையணை போட்டுப் படுப்பது

சுகம்.

அதிலும்; சாய்ந்திருந்து புத்தகம் படிப்பது,

பாடலை முணுமுணுத்துக்கொண்டு காலாட்டிக் கிடப்பது

பெரிய இன்பம்.

நான் நேற்று முழுக்க

ஒரு வேப்பை மரத்தின் குருத்தில் படுத்தேன்

அற்புதமான இனிமை!

புள்ளிக் குயில்கள்

என் அருகில் படுத்தன,

ஒட்டி.

அன்றுநான் அவளது புகைப்படத்தை

யாருக்கும் தெரியாதபடி

ஆலமரத்தின் குருத்தில் இருந்து

பார்த்தவாறே

அழுதேன்.

மரத்தின் குருத்தில் இருந்து அழுவது

சொல்ல முடியாத பேறு.

நிலாக்காலங்களில் நான் படுப்பது

என் பூமரத்தின் குருத்துகளில்.

அப்போதுதான் நான் வண்டுகளுக்குப் பாடல்

வகுப்பு நடத்துவது.

ஒருநாள் ஒரு கருவண்டு

என் வகுப்பில் கலந்துகொண்டபடியே

தூங்கியது.

இப்படியான மாணவர்களை

என் நிலாக்கால குருத்து வகுப்புகளில்

நான் விரும்புவதில்லை.

ஆத்திரத்துடனே கத்தினேன்;

வண்டு இறந்ததோ, அல்லது எழுந்து பறந்ததோ

எனக்குத் தெரியாது,

என் சத்தத்தில் முகில் அதிர்ந்து

மழை சொரிந்தது!

ஆம், நிலாக்கால நாளில் பூமரத்தின் குருத்தில்

இருந்து மழையில் குளித்தலும்

கொடை!

----------------------------------------------------------------------

என் அறைக்குள் விளக்கு வைக்க வந்தவளுக்கு

சிற்றெரும்பு ஊருவதும் எனக்குத் தெரிகிறது

இருண்டுள்ள என் அறைக்குள்.

பூத்து நட்சத்திரங்கள் மினுங்குகின்றன

என் உரோமக்கண் அனைத்தும்.

நான் தலையணையில் கிடக்கவில்லை,

நிலவில் தலை சாய்த்துள்ளேன்.

உன் கூந்தலிலே ஒருகோடி இருபத்தி நான்கி இலட்சம்

தலைமயிர்கள் உள்ளன

சரியா?

இங்கே பார்;

நான் நேற்றுப் பெய்த

மழையில் நனைந்த

தும்மலைத்தான் தும்முகிறேன்;

தங்கம் பறக்கிறதே மூக்கால்!

நான் கலண்டர் கொளுக

அடித்த ஆணிகளில்

இந்த இருண்ட அறைக்குள்ளே

புதிய சூரியன்கள் எழுகின்றன!

இருநூற்றிப் பதின்மூன்று

நுளம்புகள் திரிகின்றன

இந்த அறைக்குள்ளே.

எனக்குக், கவிதை உணர்ச்சி பொங்கி வழிகின்ற

இருண்ட

இந்த அறைக்குள்ளே,

ஐம்பதாயிரத்தி எழுநூற்றிப் பதின்நான்கு

மண் கிடக்கிறது.

உன் தலைக்குள்

அறுபத்திமூன்று பேன்,

ஈரு பதினாறு.

உன் எண்ணெய் விளக்கு வேண்டாம் போ,

அறையை விட்டு

பேன் தெறிக்கும் எனக்கும்.

--------------------------------------------------------------

பைத்தியக்கார எருமைமாடு

எவரின் தலையிலும் எவரும் ஏறிநிற்க

நான் அனுமதிக்க மாட்டேன்.

காகங்களின் எச்சம்

வாசம்தான்!

அதற்காக;

என் தோளைக் கொடுப்பேனா!

என்றெல்லாம் அந்த எருமைமாடு

பைத்தியத்தில் கத்தியது.

அந்த எருமைமாட்டிற்குச்

சரியான பைத்தியம்

குணமாக்க முடியாத அளவுக்கு

குணக்கேடு.

நான், தண்ணீரைக் கொதிக்கவைத்து ஆறவைத்து வடித்தேதான்

பருகுகிறேன் என்று

அந்த எருமைமாடுதான்,

சேற்றைக் குடித்தபடி சொல்லியது.

எவரின் வயலுக்குள்ளும்

எவரும் நுழைவது

பூரணமாகவே தடை.

என்று சட்டம் இயற்றியது.

நல்ல உச்சி வெயில்

அந்த எருமைமாட்டின் பைத்தியம்

இன்னும் உரத்திருக்க வேண்டும்;

சவர்க்காரம் போட்டே குளித்தது சேற்றில்

அந்த எருமைமாடு.

பூக்களால் தலையைத் துடைத்தது.

அசிங்கமானவர்களை எனக்குப் பிடிக்காது

என்று சொல்லியபடியே துரத்தியது

அந்த எருமைமாடு,

வெண்கொக்குகளை.

அந்த எருமைமாட்டின் படங்களும் உரைகளும்

நளைய பத்திரிகைகளில் வரலாம்!

--------------------------------------------------------

வருவேன் என்று சொன்ன அவர்

அவர் இன்னும் வரவில்லை.

அவர் வருகின்ற திசை இன்னும்

திறக்கவில்லை.

நான் நெருப்புச் சட்டிகளை ஏந்தியபடி

நிற்கின்றேன்.

என் கண் நீண்டு நிலத்தில்

இறங்கி, அவர்

வருகின்ற திசைப்பக்கம்

ஓடி மறைகிறது.

மனதுக்குள் சாம்பல்

உதிர்கிறது.

வருவேன் என்று சொன்ன அவர்

என்னானார்!

குளிர் அவ்வளவாய் இறைக்கவுமில்லையே

கரைய!

இப்போது, என் கண் இருந்த இடத்தின் உள்ளால்

பாதி செத்த இதயம்

விழுகிறது.

அதைத் தொடர்ந்து இரத்தம்

கசிகிறது.

இனி அவர் வரும் திசையால்

சுலபமாய் வரவே முடியாது!

என் இரத்தத்தில் தோய்ந்து

ஆடைகள் சேதமுற்று

என் கண்ணிலும்

இதயத்திலும்

தடுக்கி விழுந்து, விழுந்து எழும்பியே

வருதல் வேண்டும்,

வருவதாய் இருந்தால்.

----------------------------------------------------------------

கதிரையில் வந்தமர்ந்த பூமரம்

பூமரம், வந்தமர்ந்தது கதிரையில்

தன் குறையைச் சொன்னது;

மழை இல்லை

முகில்கள் கருகிச் சாம்பல் பறக்கிறது

இந்த நிலைக்குள்ளே

கன்னி கட்டுவது எப்படி

உங்கள் மூக்கில்

இனிக்கின்ற வாசம்

உற்பத்தி செய்வது சிரமமே!

எழுந்து அசைந்து இருந்தது ஒருதரம்

பூமரம்.

நான் குடிக்கக் கொடுத்த தண்ணீரைக்கூட

அன்று அது மறுத்தது.

முன்பு வருகின்ற வண்ணத்துப் பூச்சிகள்

கோடையில் கருகிநான்

மெலிந்த பிற்பாடு

வருவதில்லையே என்று சொன்னதும்

அதன் கண்களில்

நீர் சுரந்தது.

பருகுக என்று நான்

கோப்பியைக் கொடுத்தேன்.

இரண்டு கையாலும் வாங்கிய பூமரம்;

இந்த நிலையிலும் காகங்கள் வந்து

எனது கிளைகளில்

குந்திக் கழிப்பதும்,

செத்த இலைகளைக்

கொத்தி விடுவதும்,

பெரிய வருத்தமே!

பூமரம் கோப்பியைப் பருகவே இல்லை

சொல்லிச் சொல்லியே

கதிரையைச் சுரண்டிச் சுரண்டி இருந்தது.

---------------------------------------------------------------------------------

என் மாடு

அவிழ்த்துவிட்ட மாடு

இன்னும் வரவில்லை,

அவள் வதனத்துத் தோட்டத்தில் புல்மேய்ந்து கிடக்கிறது.

என்நெஞ்சு வெறும்

மரக்கொட்டில் போல,

இங்கு

இங்கு

இங்கு.

தினசரியும் பனிப்பெய்து

புல் செழித்த முகம்,

அவள் நீளக் கூந்தல்

மழைகளைக் கூட்டும்,

காலையில் வந்து

அலுவலகம் வீற்றிருந்தாள்.

என் மாடு துள்ளியது.

கயிற்றை அறுத்து

பாய்வதற்கு எத்தனிக்க;

போய்வா, பிசாசே போய்வா பெண்ணழகுப்

புல்மேய்ந்து பசியாறி வந்தமர்ந்து கொள்ளென்று

கடமைகளை

எழுதிக் கொண்டே மிருகத்தை அவிழ்த்து விட்டேன்,

போனது

போனது

இன்னும் வரவில்லை.

என் எழுத்துப் பிழைத்து

பிசகாகி எங்கோ

எல்லாம் ஓடி

புத்தகம் மட்டுமல்ல, நானும் பழுதாகி

இந்தத் தொழிலின்

இன்றையத் தினமும்

புனிதம் கெட்டு

என் பெயரைக் கெடுக்கிறது.

மாடே, வா

அவள் அழகுப் புல்லை

மேய்ந்தது போதும்

பெண் முகத்தில் இருந்து மீள்.

---------------------------------------------------------------------

பாரதியும் நானும் சாப்பிட்ட இரவு

பாரதி, மூட்டை உண்பதில்லை,

அதற்குப் பதிலாகத்தான், அவன்

உலகத்தை விழுங்கினான்.

நான் அவனோடு நேற்றிரவு

சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

மிகவும் பசி என்றான்

பாத்திரத்தைச் சேர்த்து உண்டான்.

நிலவை அவன்

உடைத்து நசித்துப் பிசைந்து உண்ட விதம்

எனக்கு வியப்பாக இருந்தது.

கடலைச் சிறு கோப்பைக்குள் நிறைத்தெடுத்தான்.

உண்டு உண்டே அவன் அதனைக் குடித்து முடிக்கையில்

சமுத்திரத்தில் நீந்திக் கொண்டிருந்த

கப்பல்களும் அவன் வயிற்றுள் சமித்தன.

எனக்கும் நல்ல பசிதான்

நான் வானத்தைப் பிடித்து விழுங்கினேன்

இன்று விடிய, அதன் வயிற்றுள் இருந்த சூரியன் எனது

தொண்டையில் சிக்கிக் குத்தியது.

பாரதி விழுந்து விழுந்து சிரித்தான்.

நட்சத்திரங்களை மிட்டாய்போல் உணவியபடி

பலமாய்.

பாரதியின் மீசையில் இருந்து இப்போதும் தேன் வடிவதனை

அந்த இரவு வேளையிலும் நான் கண்டேன்.

காற்று வழக்கம்போல் இப்போதும் அவனின்

குதிகாலைத் தடவி

பிடரியை முகர்ந்து

வாசத்தையும் இனிப்பையும் பெற்றுக்கொண்டுதான்

காதலர்களைத் தாலாட்டப் போகிறது.

நானும் பாரதியும் பூக்களைப்பற்றிப் பேசிக்கொண்டே சாப்பிட்டோம்.

கண்ணம்மாவைப் பற்றிய கதையும் வந்தது.

வயது போனாலும் கண்ணம்மா இப்போதும்

அதே இளமை, குளுகுளுப்பு, என்றான்.

நம்மூர் பெண்களது நலத்தை அவன் அக்கறையாய்

என்னிடத்தில்

துருவி விசாரித்தான்.

ஆண்களைத் தோளில் சுமந்தபடி இருந்தாலும் பாதகமில்லை

பார்த்துக் கொண்டிருக்கலாம்,

இங்கு நடப்பதோ

மிகக் கொடுமை

பெண்குடித்து அவள் வயிற்றுக்குள் இருக்கின்ற நீரில்தான்

ஆண் குளிக்கின்றான்.

பெண்ணின் வாய்க்குள்ளால் தன் குதிகாலை விட்டே

கால் கழுவுகின்றான்.

என்றெல்லாம்,

நான் சொன்னேன்.

உண்ட இடத்திலேயே வெடித்தான் பாரதி

எனது வீடு முழுக்க

அவனது கவிதைகள்

சிதறித் தெறித்தன.

போத்தல் உடைந்து தேன் வழியும் விதம்போல

அவனில் இருந்து

கவிதைகள் ஒழுகின.

நான் கையைக் கொடுத்து நாக்கில்

தொட்டு வைத்ததுகூட

மறக்க முடியாத இனிப்பாய்

இருந்தது.

தமிழின் ஒவ்வொரு எழுத்தும் உயிர்த்து, உயிர்த்து,

நாங்கள் சாப்பிட்ட இடமெல்லாம்

பாரதியை வணங்க வந்தன.

எதோ, ஓர் எழுத்து என்னை வந்து

தொடையில் குத்தியது.

பாரதியை நான் உடைத்த ஆத்திரத்தில்,

இரட்டைக் கொம்பை நீட்டியபடி.

------------------------------------------------------------

அபிமானக் கவிஞனைத் தின்ற கரப்பான்

இன்று முழுக்க

நான் புத்தகம் படிக்கவில்லை.

கரப்பான் அரித்த எனக்கு விருப்பமான, அந்த

இதயம் போன்ற

கவிதைத் தொகுதியை

பார்த்துப் பார்த்தே அழுதேன்,

விரிக்க, விரிக்க ஓட்டை

சில இடத்தில்

தாள், தொட்டால் கழன்றுவரும் தன்மை.

அந்தக் கவிஞனின்

எத்தனை உணர்ச்சிகளைக் குடித்தது

பொல்லாத கரப்பான்!

அவனொரு, உலகக் கவிஞன்!

என்னைப்போன்று ஒரு சிறுதுரும்பு அல்ல.

அந்தக் கவிஞனின் படைப்புகள்

தின்று குவித்த

கரப்பானுக்கு இனித்திருக்க வேண்டும்,

சிலது உறைத்திருக்கும்;

ஆனாலும், துப்பவில்லை.

அப்படி ருசியாய் இருந்திருக்கும் அவனின்

மம எண்ணத்தில் நெழிந்த மொழி.

என் மனம் சொன்னது;

இந்தக் கொடுமையைப் பார்த்துப் பார்த்து, அழுவதைவிட

பூரணமாய் பார்க்காமல்

இரண்டு கண்களையும் கோழி முட்டைபோல் பொரித்து

தின்ற கரப்பானுக்கே மீண்டும்

தீனாகப் போடென்று,

போடுவேன்.

-----------------------------------------------------------

எனது உள்ளங்கையில் நான்

என்னை நான்

எனது உள்ளங் கையில் இருத்தி வைத்துப்

பார்த்தேன் அழகு.

ஒரு மதியத்தில்

காட்டு மரமொன்றின் நிழலின் கீழ்

நான் இருந்தபடி

கையை நீட்டி

எனது உள்ளங் கையில் இருத்திவைத்த என்னை

திடீரெனப் பொத்தினேன்,

உள்ளே அகப்பட்ட நான்

திமிறவில்லை.

எழுந்து

உடைகளைத் தட்டிக்கொண்டு,

என்னை நான்

எனது சட்டைப் பைக்குள் போட்டப

இன்னொரு நிழலின்கீழ் சென்றேன்.

அங்கு இருந்து, சட்டைப்பைக்குள்

இருந்த என்னை

நான்

மீண்டும் மற்ற உள்ளங்கையில்

வைக்க எடுத்தேன்;

முன்னர் கையில் இருந்ததை விடவும்

இப்போது கருகிப் பொசுங்கி இருந்ததால்,

அந்த உள்ளங் கையில் இருந்தும் நான்

இருந்ததைப்பால

தெரியவே இல்லை.

அவ்வளவு தீ

ஊரில்!

-----------------------------------------------------

செத்த முகிலின் மழை

நனையாதே, சீ... ஊத்தைமழை.

முகில் அவிந்த

நாற்ற மழை.

மணலும் குடிக்காமல் வாந்தி எடுப்பதனால்,

ஓடிப்போய்

வளவின் மூலையிலே சுரக்கிறது.

விடும் வரைக்கும்

நீ வந்து

உள்ளே இரு, தும்மும்.

பார்;

நெழிந்த மண்புழு

மீண்டும்

நெழிய விரும்பாமல் மண்ணுக்குள் புதைவதை

மரம்

முகத்தை மூடி

பூக்களை

கையால் பொத்துவதால்,

ஒன்றும் உதிரவில்லை இந்த் ஊத்தை மழை பட்டு.

நாற்றம்தான்

நமது மூக்குள் வருகிறது.

மழையென்றால் வெள்ளை!

ஆசையுடன்

அள்ளிக் குடிக்கும் நீர்!

மரங்கள் குளித்து

சில்லென்ற காற்று அவற்றிற்குச் சவர்க்காரம் தேய்த்து

கழுவி எடுக்கும் நிகழ்வு!

இது மழையா?

நாட்பட்ட சீழ்!

வானத்தில் ஓடாமல் எப்போதோ எதனாலோ

செத்து அந்தரத்தில்

புல் முளைக்காத இடத்தில் கிடந்து அவிந்த

முகிலின் ஊனம்.

-----------------------------------------------------

மனித நேயத்தின் வெளிச்சம்

வீதியில் இருந்து என் மனைக்குள் வரும்போதே

நமக்குள் இருந்த பகைமைகளை எரித்துவந்தாய்

உன் புன்சிரிப்பை

ஒரு தீப்பந்தமாய் பிடித்து,

என் நெஞ்சில்.

இன்று காலையில் வந்த நீ

வெயில் மூத்து

மதியம் தட்டும்வரை

என்னைச் சீனிபோட்டுக் கரைத்துக் குடித்தாய்,

பாலாய்,

என் நெஞ்சை

விரித்துவைத்து

பாலாப்பழமாய் உண்டாய்.

என் நண்பனே அதன் கொட்டைகளைக்கூட

துப்பாமல் விழுங்குகிறாய்,

முழுதாய்!

ஓர் ஆண்டு இருக்கும்

இல்லை;

மாதங்களோடு மாதங்கள் முட்டி

காலம் உடைந்து தூளாகி

இரண்டு ஆண்டுகளின் நஷ்டத்திலாவது

நாம் இந்தநிலை வந்தோம்,

மகிழ்ச்சிதான்!

உண்ணு;

இன்னும் எனது பழத்தை மட்டுமல்ல,

நீ முன்பு சுவைப்பதுவாய்

அதன் தோலையும் வைக்கோலையும் கூட.

சே;

அதில் ஒட்டும் ஈயைத் துரத்தி விரட்டாமல்

உண்ணாதே நண்ப

எனது பிரியத்தில்!

வெயில் மூத்துப் போகிறது,

நமது நட்பைப்போல்.

கால் உடைந்த வெள்ளிகளும் இன்றிரவு மினுங்கும்

நமது முகங்கள் போல்!

பற்கள் போல்!

மனிய நேயத்தின் வெளிச்சம் போல்!

-----------------------------------------------------

என் கந்தோர் முழுமதி

கப்பல் விட்டபடி குதூகலிப்பாய்

நான் சிரித்தால்,

கடலை உன் மேசையிலே கூட்டி இருத்திவைத்து

அதற்குள்.

மலையைத் தலைமயிரில் கட்டிக் கிறுக்குவாய்

தென்றலைக் கூட்டும் நெடிய கூந்தலல்லவா உன்னுடைய

தலையின் மயிர்கள்!

அவைகளால், கதிரையிலே

இருந்தபடி,

உனது,

வேலைகளையும் சட்டுக்குச் செய்தபடி.

அன்று நீ

வானம் விட்டாய்!

சீறி வீசும் பெருங்காற்றும் இல்லை,

அன்று

மரங்கள் வேர் ஆட்டி எச்சரித்த,

செத்துப்போகும் அளவுக்கு இருந்த,

தினம்.

இருந்தாலும்,

நீ இருப்பிடத்தில் இருந்து விட்ட வானம்

சிறிய நெடு நூலில்

பறந்தது மிக நன்றாய்.

நான் சிரித்தால்,

அல்லது கதைத்தால்,

நீ இவ்வளவும் செய்கிறாய்,

செய்யாதமாதிரி இருக்கும் ஒருவிதமாய்!

இன்று நான் கதைக்கவில்லை, என்னசெய்வாய்;

நெஞ்சு பிய்ந்து

அதன் துண்டுகளை நான் பொறுக்கி

ஒட்ட முடியாத ஒரு நிலையில்.

தனிப்பட்ட வேதனையில்.

ஓ... உன் கண்ணைக் கழற்றி மேசையிலா வைத்துவிட்டாய்

முகத்தால் இரத்தம் வடியும்

என் கந்தோர் முழுமதி!

--------------------------------------------------------------------------------------------------------

நான் மடித்து வைத்த பிணம்

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு

அவன்

சிறிய கடிதமாகி

தபாற்காரன் கொண்டுதர வந்தான்.

ஒருவாறு போய்ச் சேர்ந்து விட்டதாகவும்;

இருந்தாலும்,

அங்கு படுக்கும் அறைக்குள்

இங்குதான் கிடப்பதுமாய்

சொன்னான்.

நீ சுகமா எனவிசாரித்தான்,

பின்வரும் பாணியில்;

பல நாட்கள் போரிட்டு

நான் ஒருநாள் கண்ணயரும்

நிர்ப்பந்த நித்திரையைப்போல!

என.

தான் தினமும்

இரு வானம் பார்ப்பதாயும்,

ஒன்று பூத்து,

மற்றையது கருகியும்.

இரண்டு நிலத்தின் நீரில் குளித்து

அங்கிருந்து கைநீட்டி

இங்குள்ள துவாயை இழுத்து

துடைப்பதாயும்,

வாங்கி

உடைத்த நேரம்முதல் அழுதான்.

நான் அவனை

மடித்துவைத்தேன் பத்திரமாய்,

பிணமென்ற பூச்சி அறிந்து ஊராமல்.

-----------------------------------------------------

தூரம்போய்விட்ட எனது ஒற்றைக்கு

போன யுகத்தில் வந்ததற்கு

இந்த யுகத்தில் வந்திருந்தாய்

நேற்று.

அதுவும்;

வந்தாயா,

இல்லை வரவில்லையா என்பது

நல்ல தெளிவில்லை எனக்கு.

அவ்வளவு அவசரம் உனக்கு!

உன் தலையில்

பெரியதொரு சாக்கு இருந்தது.

அது நிறைய

வினாடியும் நிமிடமுமாய் காலத்தின் கனம்.

பாரம்தான்!

வீட்டுக்குள் வா

நீர் அருந்தியாவது போக

என்றழைத்தேன் உன்னை;

இல்லையென்றாய், ஒரு கதையை

தின்றாய், இன்னுமொன்றை

தந்தாய், அவசரத்தில்

சிலதை துப்பிக்கொண்டே வழிநெடுகப் போனாய்

போ நண்ப;

என்னை விட்டும்

கொஞ்சம் கொஞ்சமாக குறைகின்றாய் நீ.

தூரம் போய்

உன் வாழ்க்கையை இருத்திக்கொண்டதால் ஒரு நிகழ்வால்

நமக்குள்

இப்படியொரு பேய்,

நேரமாய்.

நீ நேற்று

வழிநெடுக

துப்பிய துப்பலகளை நான்பொறுக்கி அவற்றின்

பொருள் அறிந்தேன்.

உனக்கு;

நீயும் நானும், அங்கு நீ செல்லுமுன்னர்-

பகல் ஊத்தை அப்பும் மாலைகளில் போனால்

காற்று தன்னிடம் இல்லாத வேளையிலும்

மரங்களிடம் வட்டிக்குக் கடன் வாங்கி

வீசும் கடற்கரை நினைவுண்டா!

அந்தத் தினங்களிலே

நாம் பறந்த தெருவையும்,

அதில் ஒரு வேலிக்குள்

நம்மை ஒருமித்தே ரசித்து தினம் படம்பிடித்த

அந்தப் பொதுநிறத்துப் பூவையும்!

அந்தப் பூ

இப்போது

கண்ணைக் கழற்றி பிடரியிலே பூட்டியது

அழுது.

எடுத்த படங்களைக்

கிழித்தும் எறிந்து

நான் ஒற்றையாகப் போக.

-----------------------------------------------------

பொன் ஆற்றின் ஒரு கதை

குளித்து முடிந்ததா சூரியனே!

மீன்கள் கடித்தனவா!

தாமரைக்குள் நீ விழுந்து

குளிக்கும் அழகே தனி.

மஞ்சல் அரைத்துக் கரைத்த ஆறு இது.

அம்ம்,

பொன் அருவி!

எருமைமாடுகளும் தங்கமுலாம் பூசிய

அழகுப் பதுமைகள் போல

எந்த நேரத்திலும்

இந்த ஆற்றில்

குளிக்கும்.

ஒருநாள்

ஒரு தங்க எருமைமாட்டிற்கும்

அழகிய ஒரு வெண் கொக்கிற்கும்

காதல் மலர்ந்தது,

இந்த ஆற்றில்தான்!

பிறகென்ன;

கொக்கு

மீன் தேடுவதே இல்லை.

அந்த எருமைமாட்டில் மையல் கொண்டு

தினம்தினம் இந்த ஆற்றைச் சுற்றிப்

பறக்கத் தொடங்கியது.

தங்க எருமைமாடும் அப்பிடித்தான்

கொக்குப் பறக்காத நேரத்தில்

சோர்ந்திருக்கும்.

ஒருநாள்

தாமரைகள் அதிகம் பூத்திருந்த தினத்தில்

தவளைகள் கீதம் பாட

தங்க எருமைமாட்டைத் தூக்கிப் பறந்தது

அந்த வெண்கொக்கு.

எருமைமாடு

அட்டையைப்போல அதன் காலில்

ஒட்டியிருந்தது

காதலில்.

-----------------------------------------------------

ஆடுகள் உலகமே

தொடர்ந்து, அந்த மரத்தை அந்த ஆடு

கடித்துக்கொண்டே வந்தது.

நாட்போக்கில் மரம்

குட்டையானது.

முந்தநாள் இரவு

மழை கொஞ்சம் பெய்திருந்தது.

விரல் உதிர்ந்து மொட்டையாய் நின்ற கையில்

சில துளிர்களை

எழுப்பி, முனைந்தது மரம்;

உயிர்க்க.

அதற்கு

சரியான ஏக்கமொன்று மனதிற்குள் இருந்தது.

தன்னோடு ஒன்றாக முளைத்து, ஒன்றாக வளர்ந்த

பக்கத்து வீட்டின் கன்று

அந்த ஆடு புக முடியாதபடி

வளர்க்கப்பட்டதால்,

அழகு ததும்ப காற்றில் படம்

கீறிக்கொண்டு நிற்பதை

பார்த்து அழுது,

ஆட்டைக் கண்டதும் பல்லைக் கடித்தது.

இருந்தாலும்

ஆட்டைக் கடிக்க அது இதுவரை முடியவில்லை.

என்றோ கடிப்பேன் என்ற சத்தத்துடன்

ஒரு வேர்

நேற்றுத்தான் ஓடியது.

அந்த வேர்தான்

பூமியை உசுப்பி

சில மலைகளைச் சரித்தது.

பாவம், இவை ஒன்றுமே ஆட்டுக்குத் தெரியாது.

வழக்கம் போலதான் கடிக்க வந்தது இன்றும்,

அந்த ஆடு

மரத்தை.

-----------------------------------------------------

நத்தை பறந்த கண்ணிமை இலை மரம்

நத்தை

இன்னொரு தடவை முட்டி உசுப்பியது

அந்தச் சிறிய மரத்தை.

பாடுவது அந்தச் சிறிய மரம்தானா

என்ற சந்தேகம் அதற்கு.

ஆம், மரம்தான் பாடியது!

வாயைப் பிளந்தபட்

தன் சதையை ஓட்டிற்குள்

இழுக்காமலே வெளியில் வைத்தப்டி

நின்றது,

நத்தை.

அந்தச் சிறிய மரத்தின் பாடலில்

தன்னை மறந்தது.

அந்த மரம் பாடிய பாடல் அனைத்தும்

நத்தைக்கு மிக அழகாகக் கேட்டது.

அந்த மரத்தின் பாடல் முழுக்க

இழந்த,

ஒரு நிறைவேறாத காதலைப் பற்றியதாய்

அமைந்ததால்,

நத்தைக்கு மிகத் துக்கம்.

உன் காதல் கடிதங்கள் துடிக்கின்றன கண்ணே

நான் அடுக்கிவைத்துப் பூட்டி

வைத்திருக்கும் பெட்டிக்குள்,

வா!

இருவருமாகவே திறந்து விடுவோம்.

அவை பறந்து

எங்காவது ஒரு வனத்தில்

கூடுகட்டிப் புணரட்டும்.

உன் காதல் கடிதங்கள்

இந்த உலகத்தில்

ஒரு புது இனப் பறவைகளாக

இனம் பெருக்கி வாழட்டும்.

என்று

அந்த மரம்

பாடிக்கொண்டே இருக்க, இருக்க,

நத்தைக்குக்

கண்ணீர் வந்தது.

மீண்டும் ஒருதரம் உசுப்பியது மரத்தை.

அந்த சிறிய மரத்தில் இருந்து

ஒரு புதிய இலை

அதன் அருகில் வந்து விழுந்தது.

ஆம், அது

ஒருவனது கண்ணிமை!

நத்தை ஓடிக்கொண்டே கத்தியது;

நிறைவேறாத காதலுடன்

செத்த ஒருவன்

முளைத்துள்ளான் மரமாய், முளைத்துள்ளான் மரமாய்,

என்று அந்த

வட்டாரம் முழுக்க

பலமாய், இப்போது-

சிறகடித்துப் பறந்தபடி.

-----------------------------------------------------

பிச்சைக்கார வானம்

எலி கடித்து

வானம் தொங்குகின்ற சங்கிலிகள்

சாடையாய் அறுந்திருப்பதாக

கதைகள் அடிபடுகின்றன.

இங்கிருந்து எப்படி எலி துள்ளியது

அந்த இடத்திற்கு!

இரும்புச் சங்கிலியைக் கடிக்கும் பற்கள் உள்ள எலிகள்

மிக முக்கியமாக அந்த இடத்திற்கு

போகும் வரைக்கும்,

அதுதான் போக;

கடிக்கும் வரையாச்சும்,

எவரும் காணாமல் இருந்தது மாபெரிய தவறு.

விரைவில்

வானம்

கூரை வந்து விழுவதைப் போல

தரையில் விழும் என்பதை

அதற்குள் இருந்து தினமும் வருகின்ற

காரமுள்ள பிறவி

சூரியன் சொன்னதாய்

நேற்று ஒரு குயில் கத்திக் கத்திப் பறந்தது

ஊரெல்லாம்.

சா... ... எலாக்ள்;

கொடூரமுள்ள எலிகள்,

நட்சத்திரங்களைத் தானியங்கள் கொறிப்பதைப் போல்

கொறித்துப் புசித்தே

நிலவு

காதல் கடிதங்கள் வைத்திருக்கும்

பெட்டிக்குள்

படுப்பதாக

காற்று சொல்லியதாக நேற்று பூவும் பேசியது.

அதுதான் முன்போல

வானத்தில் வெள்ளிகளைக்

காணவே இல்லை.

ஒன்று... இரண்டு... மூன்று... ஆமாம்;

எல்லாமாகப் பத்து.

அதில் ஒன்று

என்னுடைய அவள்!

போனால் ஒன்பது,

இன்றைய வானத்தில் பூத்த வெள்ளிகள்;

பிச்சைக்கார வானம்.

-----------------------------------------------------

நான் சந்தோஷ்மாக இருந்த அன்று

என்னைச் சுமந்தபடி போயின

வண்ணத்துப் பூச்சிகள்.

கொண்டுபோய்;

ஒரு மரத்தின் பழுத்த இலையில் வைத்தன

இருக்க.

தூங்குக என்று

பூக்களைக் கொண்டுவந்து விசிறியாய் வீசின

காற்று மணக்க மணக்க

பூச்சிகள்.

உண்ணத் தேன் கொடுத்தன வாய்க்குள்.

நான் அங்கிருந்து பாடிய கவிதையை

சிறகிற்குள் பத்திரமாய்

கொண்டு சென்று பூமரத்தின் கன்னிக்குள்

ஊற்றின,

நாளைய மலர்கள் இனிக்க.

கால் ஊன்றியது ஒரு பூச்சி.

ஒவ்வொரு உரோமம் உரோமமாக

மினுக்கி மினுக்கி

காலில்

அடுக்கி வைத்தது இன்னொன்று.

ஒரு பூச்சி

என்னை இழுத்து

முகர்ந்தது.

சந்தோஷமாக இருக்கின்றான்

இவன் "மனிததான்" என்றது.

எல்லாப் பூச்சிகளும் கையடித்து மகிழ்ந்தன.

நான் இருந்த

பழுத்த இலை முனகியது.

ஆனாலும் விழவில்லை.

பாரமே இல்லை, நான் இன்று

பாரமே இல்லை.

ஒரு பூச்சி சொல்லியது,

உன்னை நான்

சிறு விரலால் தூக்கிக் காட்டுகிறேன் என்று;

தூக்கியபடி.

ஆம், வண்ணத்துப் பூச்சிகள் இராட்சதப் பறவைகள்

பலம் மிக்கவை.

-----------------------------------------------------

அந்தக் காட்டுப் பூமரம்

இன்றிரவு;

ஒரு காட்டுப் பூமரத்தை நான் பிரசவித்தேன்.

பூக்கள் நிறைந்திருந்தன நான் பிரசவித்த பூமரத்தில்.

பறவைகளும் கத்தின.

கோடான கோடி வண்ணத்துப் பூச்சிகள்

நான் பிரசவித்த பூமரத்தைச்

சுற்றிச் சுற்றிப் பறந்நன.

நிலவு

வானத்தின்

முக்கால் தூரம் வந்துவிட்ட நேரம்

நான் பிரசவித்துக்

களைத்திருந்தேன்.

நான் ஆண்.

எங்கிருந்து, எப்படிக், கர்க்க்கட்டியது

இந்தப் பூமரம்!

ஓ... அன்று நான், அந்தப் பயணத்தில் கண்ட

காட்டுப் பூமரத்தின் முகம்

இந்த மரத்திற்கும்!

அந்த ஆற்றின் ஓரத்தில் அந்த மரம் நிற்கிறது.

தலையில் பல வர்ணத்தில்

மை பூசியது மாதிரி

பூக்கள்.

அந்த மரத்தில் அன்று என் மனதைக்

கொளுவி வைத்துவிட்டு வந்தேன்.

ஆம், அந்த மரத்தின் முகமே

இந்த மரத்தின் முகம்!

தூக்கிக் கொஞ்சி பெயர்சூட்டித் தாலாட்ட

விடியட்டும்.

-----------------------------------------------------

காணாமல்போன அவனின் பாடல்

அவன் கட்டடங்களில் குந்தியிருக்கிறான்,

கிளியாய்.

குயிலாய்.

யார்சொன்னது அவன் காணாமல் போய்விட்டானென்று!

வீதியின் ஓரத்தில் நிற்கின்ற புற்களிலும்

அவன்

பனி விழும் காலையில்,

சில இரவுகளிலும்,

வீற்றிருந்ததை நான் கண்டிருக்கிறேன்.

அன்று நான்

மிக அவசரமாக யோசனையுடன்

சென்று கொண்டிருந்தேன்.

அவன் ஒரு புறாவின் வடிவில்

பெரிய நிழல் மரம் ஒன்றில்

கால்நீட்டிப் படுத்திருந்து

அவன் விருப்பத்துடன் படிக்கும் புத்தகத்தைப்

படித்துக் கொண்டிருந்தான்.

நான் கை அசைத்துவிட்டுப் போனேன்.

அன்று

அவன் என்னைக் கண்டு சிரித்தான்,

எங்கென்று ஞாபகமில்லை.

அன்றைக்கு முதல்நாளும்,

நான் அவனைச் சந்தித்தேன்.

சந்தையில் பழம் வாங்கியபடி

நின்றதாய் நினைவுண்டு.

யார் சொன்னது;

அவனை யாரோ

கடத்திப் போய்

கொன்றதாய்!

அவன் பாடிய பாடலை நேற்றும் கேட்டேனே

மிகவும் இனிமையாய்,

ஒரு மழையின் ஓசையாய்!

அவன் இப்போதும் மிக அற்புதமாகப் பாடுகிறான்.

நாளை வரும் மழையில்

காதுகொடு

அவன் பாடுவான்

கேட்கலாம்!

மாம்பழத்துள் இருக்கும் புழுத்தெறித்து நிலத்தில்

ஆடும் அளவுக்கு,

அவன் பாடல் இனிக்கிறது.

-----------------------------------------------------

பல்லிகள் கத்தும் துயர்

ஒருவன் அவனுடைய

அவளை விட்டுப் பிரியலாம்.

மண்டை புழுத்து அவளது கூந்தல்

கொட்டி மொட்டையாய் இருப்பதை கண்டும்

நெஞ்சை நெஞ்சாய் வைத்துக் கொள்ளலாம்.

அவள் தொப்புள் ஊதி

பலூனாய் பருத்து

நின்ற போதும்

தாங்கலாம்.

அவள் மூக்கு நெடுத்து நிலத்தில் விழுந்தால்

அதுவும் அழகென

மனதை ஆற்றலாம்.

காது நீண்டு

தோளைத் தடவி,

ஒரு கண் மூடி

மறுகண் அவிந்தும்,

அழகி நீயே அழகி என்று

தேற்றி மனதை வாழலாம்.

நிலவில்

சவம் அடக்குதல்

பெரிய துயரல்ல.

மையவாடிகள் பூமியில் குறைந்தால்

வேறென்ன செய்வது என்று சொல்லலாம்.

தும்பியை வண்டை

பிடித்து நசுக்கலாம்.

உலகில் உள்ள மரங்கள் அனைத்தையும்

எரித்துக் கருக்கலாம்.

கைகோர்த்துப் போகும் அழகிய சோடியை

வாகனம் மோதிச் சிதைக்கலாம்.

துயரில்லை ஒன்றும்

கட்டிலில் இருந்த ஒருவனின் மனைவியின்

முப்பது பல்லும்

இருபது நகமும்

அவன் கண்ணின் முன்னே உதிரலாம்.

மார்பு வற்றலாம்.

துயரிலும் துயர்

அதுவும் இல்லை.

துயர்-

வாழ்ந்த அறையை விட்டுப் பிரிவது,

பல்லிகள் கத்த.

பூச்சிகள் இரைய.

-----------------------------------------------------

நான் போகமுடியாத அயலூர்

அந்த ஊரை

நாலு மூலையிலும் நாலு குயில் தூக்கி

கொண்டுவந்து

என் நெஞ்சுக்குள் வைத்தன

இன்று காலையிலே.

அந்தக் கிராமத்தின் பெருவாவி

இப்போது எனக்குள்ளே ஓடியது.

அதில் பூத்திருக்கும் தாமரைகள்

வண்டு குந்தப் பூத்தபடி.

துப்பாக்கி வேலிகளால் அடைபட்டுக் கிடந்த அந்த

சர்க்கரை மணக்கும் மணல் கிராமம்

எனக்குள்ளேயே இன்று விடிந்தது.

சந்தைக்குப் போகின்றார் சில மனிதர்கள்!

சில மனிதர்கள்!

வயலில் உழைத்தபடி நிற்கின்றனர்!

நான் முன்பு பார்க்கும்

அந்தப் பாடசாலை வண்ணாத்தி

இப்போது சற்றுப் பருத்தபடி

பறக்கிறது.

நான் அங்கு போய்த்திரிந்த காலத்தில்

புன்னகைக்கும் விதம் போன்றே

எனக்குள் இருக்கின்ற கிராகத்தில்

என்னைப் பார்த்துப்

புன்னைக்கிறது.

சரி; இளம் அதிகாலைக் குயில்களே

மீண்டும் தூக்குங்கள் கிராமத்தை.

கொண்டுபோய், இது

இருந்த இடத்தில் வையுங்கள்.

நாடு நலமுற்று

ஒரே கொடியில் வெள்ளை பச்சை நீலமாய்

சிவப்பும் மஞ்சலுமெனப்

பூக்கள் விரிகின்ற காலம் வரைக்கும்

நான் போக முடியாது இந்த ஊருக்கு!

இப்படித்தான் இடைக்கிடை

தூக்கிவந்து எனக்குள்

வையுங்கள், ரசித்துவிட்டு

தருகிறேன்; எனது-

பொன்னூரை, அழகுக்

கண்ணூரை, பாடசாலை

வண்ணாத்தி பறக்கின்ற அயலூரை.

-----------------------------------------------------

மலங்கழிக்கும் பேய்க்காற்று

இன்றும், மனதுக்குள் மலங்கழித்து விட்டது

காற்று.

இருபத்தி ஐந்துபேர்!

அதில் ஏழுபேர் ஆண்கள்.

பதின்மூன்று பெண்கள்.

நாலு குழந்தை.

ஒரு பிள்ளைத் தாய்ச்சியும் என,

அது கழித்த மலம்

வயிற்றைக் குமட்டியது.

ஐயோ!

வாகனத்தை மறித்தனர்.

இறக்கினர்.

இழுத்தனர்.

இனம் இனமாகப் பிரித்தனர்.

ஓர் இனம்போக ஓர் இனத்தை வெட்டினர்.

குத்தினர். சுட்டனர்.

பிள்ளைத்தாய்ச்சியை வெட்டிச் சிசுவை

எடுத்துத் தெருவில் நசித்தனர்.

என்றெல்லாம் இன்றையக் காற்று

என் மனதுக்குள் கழித்த மலத்தில்

மனிதத்தின் நாற்றம் தாங்காமல்,

சூரியன் ஒருதரம் ஆடி நின்றது.

அதன் கதிர்கள் சில

முறிந்து தொங்கின,

குடையின் கம்பிபோல்.

அனைவருமே பயணிகள்!

ஒன்றும் விளங்காத மாடுகள்.

புத்தி இருந்தால் யோசித்து நடந்திருக்கும்.

கட்டை போட்டு வாகனத்தை மறித்துத்தான்

அக்கிரமம் நடந்திருக்கு.

சிலருக்கு படுகாயம்.

தப்பிப் பிழைத்த ஒருவன் இன்னும்

நினைவின்றிக் கிடக்கின்றான்.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மொத்தமாய்!

கிழவி உட்பட.

என்றெல்லாம் இன்றையப் பேய்க்காற்று, நாய்க்காற்று,

தெருவெல்லாம் நடந்தபடி, ஊரெல்லாம் மேய்ந்தபடி,

கழிக்கிறது மலம்.

மூக்கைப் பொத்தியும் நாற்றம் அடங்கவில்லை

என் மனதுக்குள் மலம்.

-----------------------------------------------------

நானான உருண்டை

என்னை உருட்டி உருட்டித் திரட்டியது

சாணமுருட்டும் கருவண்டு.

"நாற்றம்" என்று முகத்தைச் சுழித்தது.

இடுப்புக்குள் இருந்த

கைக்குட்டையால்

முகத்தைத் துடைத்தது.

திரும்பவும் உருட்டி குப்பையில் தள்ளிவிட்டு

தள்ளி நின்றது.

குப்பையில் கிடந்த ஒரு தவளைப் பிணம்

வண்டு

உருட்டித் திரட்டி

தள்ளிய "நானான" உருண்டையைப் பார்த்து,

சற்று விலகிப்போய்

குப்பையின் ஓரத்தில்

குந்தி இருந்து எடுத்தது வாந்தி

தலையில் கைவைத்து.

வெறுப்போடு

காளானின் அடியிலே இளைப்பாறிக் கொண்டிருந்த

வண்டு அழுதது.

நான் இந்த நாற்ற மனிதனை

உருட்டி வந்த்தே தவறு.

பல விதத்தில் கொடிய நெடி

இவர்களுக்குண்டு.

எப்போதும் நான்

சாணமே உருட்டுவேன்.

என்ன செய்ய;

ஓர் ஆசையில் உருட்டினேன்.

தாங்கமுடியாத நாற்றம்.

சொல்லிக் கொண்டே வண்டு திரும்பவும்

கைக்குட்டையை எடுத்து துடைத்தது முகத்தை,

மூக்கையும் சீறி.

-----------------------------------------------------

கடல் அழுத தலை வெட்டிய பிணம்

கடல், குமுறிக் குமுறி அழுதது.

தன்னில் மிதந்த தலை வெட்டிய பிணத்தை

நினைத்து நினைத்து.

அதைச் எய்தவன் யார்,

என்று மிக ஆத்திரமாய்

ஒரு மீன் துள்ளி

எழுந்தபடி கேட்டது.

வெட்கம், மிக வெட்கம், ஆனால்;

எனக்குத் தெரியாது.

என் அடியில் பிணம் ஒதுங்கிய பிறகு

கரையில்

நிற்க மனமில்லை எனக்கு.

என்றபடி

நான் எப்போதும் சாய்த்திருக்கும் நெடிய முடத் தென்னை

கடலுக்குள் ஓடியது ஓலைகள் உதிர.

எனக்கும் "மனம்" உண்டு என்றது கடல்,

சீறிச் சிறிது ஆத்திரமாய்

என்னைப் பார்த்து.

மீன் வளர்ப்பதற்கும்

அவை சினைவைத்துப் பொரிப்பதற்கும்

மட்டும் நானில்லை.

என் கரையில் இருக்கின்ற காதலனின், காதலியின்,

கதைகளிலும் பங்குண்டு;

எனக்கு என்றபடி

சுறாமீன்களே இனிக் காவலுக்குப் போங்கள் இரவுகளில் என்கரையில்

என்று கத்தியது.

இனி யாராலும் முடியாது இரவுகளில், கடலில்

தலை வெட்டிய பிணம் மிதக்கவிட.

அது விடாது!

-----------------------------------------------------

உலகின் முள்ளந்தண்டில் ஒரு பாடல்

என்னைப் பற்றி

ஒரு பாடல் எழுதிக் கொடுத்திருந்தேன்,

இந்த உலகின்

முள்ளந் தண்டில் ஒட்ட.

ஒட்டியது காலம்.

அதை வாசித்துப் பார்த்த நாட்கள்

ஏங்கினவே நின்று.

நான் அந்தப் பாடலில்;

மனித இரத்தத்தை குருவிக்குள் பாய்ச்சுவோம்,

குருவியின் உதிரத்தை

மனிதருக்குள் ஊற்றுவோம்.

என்றெல்லாம் எழுதிய வரிகளை

ரசித்து ரசித்து விடிந்த இராக்களும்,

மகிழ்ந்து வியந்து தூங்கிய பகல்களும்,

அதிகம்; ஆனால்-

மனிதன் உணரவில்லை.

மனித இரத்தம்

குருவியுள் போவதா?

குருவியின் உதிரமா

நமக்குள் வருவது?

என்று மனிதன் நகைத்தானே தவிர,

அந்தப் பாடலைப் பிரிக்கவில்லை;

பொருள் தேடி.

குருவியோ குருவி, ஊரெல்லாம் பறக்கும்

உயிர், மனிதா;

நீயும் பற!

என்றெல்லாம் அந்தப் பாடலில் பின் வரும்,

அதைப் படிக்க பொறுமையே இல்லை

இந்த மனிதனுக்கு.

நுனிப்புல் மேய்ந்தபடி!

என் பாடலைப் பழித்தபடி!

குருவிக்குள் மனிதனின் இரத்தத்தை உற்றுவது

ஏனென்றும் எனது

பாடலில் பின் வரும்.

-----------------------------------------------------

எனக்குள் விழுந்த எனக்குள் இருப்பவர்

எனக்குள் இருந்தவர் ஓடிப்போனார்.

கையில் ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு

வாசல் முழுக்கத் தேடினார்.

பின், ஓர் இடத்தில் நின்றார்.

தோண்டினார்.

எடுத்துப் போட்டார்;

என் செத்துப்போன இதயம்!

அதற்குள் இருந்த மயில்!

நான் பறந்த சிறகு!

குடியிருந்த பூ!

இரவு; மிகவும் நேரமாய் பனிபெய்யவில்லை,

மிகவும் உஷ்ணமாய் இருந்தது.

தோண்டி எடுத்த பிணங்களை

சிறிது நேரம் தூக்கிப்பார்த்தார்

மூக்கில் வைத்து முகர்ந்தார்

கண்ணில் எடுத்து சிலதை ஒற்றினார்

அருகில் இருந்த

வெண் பூக்களைப் பறித்து

அவைகளின் மேலே தூவினார்.

இரவு; துயரம் தாங்காமல்

மழையே பெய்தது

அவசர அவ்சரமாய் எனக்குள் இருந்த

அவர்

அந்த இடத்திலேயே அவைகளைப் புதைத்தார்.

மண்ணை இழுத்து மூட விரும்பாமல்

பூக்களைக் கொண்டே மடுவை மூடினார்

மிகவும் சோகம் அவரது முகத்தில்.

ஓடி வந்து எனக்குள் விழுந்தார்;

முகம் அடிபட,

குப்பற.

-----------------------------------------------------

என் காகங்களுக்காக

நான் காறித் துப்பினேன்.

அதற்குள் இருந்து மனிதனின் மானம்

நாறியது.

தெருவெல்லாம்

காகங்கள் கரைந்தன,

எனது காறித் துப்பலுக்குள் நாறிய மனிதனின்

மானத்தைத் தூக்கிப்

பறந்து அழக்குண்ண

அவைகளுக்கு முடியாமல்

விக்கி விக்கி அழுதன,

தன்மானம் மேலிட்டு.

ஆம், என்னுடைய காகங்களே

தவறுதான் செய்துவிட்டேன்

உங்கள் தன்மானத்தை மதிக்காமல்

மனிதனின் மானத்தை,

உங்களைப் பார்த்துக் காறித் துப்பினேனே

"புசிக்கும்படி"

பெரிய தவறுதான்.

நான் துப்பிய துப்பலை

மண்ணுக்குள் புதைக்கின்றேன்,

நீங்கள் பறவுங்கள்

தன்மானத்தோடு.

எலிப்பிணத்தை அல்லது மாட்டின் சாணத்தை

உண்ணுங்கள், மனிதனின்

மானம் இழிவு.

ஒருவனை ஒருவன் தின்னுபவன்!

பல

விதமாகப் பிரிந்தவன்!

மண்ணுக்குள் அவனது மானத்தை நான் புதைப்பேன்,

அவ்விடத்தில்

மரம் முளைக்காது;

என் காகங்களுக்காக.

-----------------------------------------------------

துள்ளி விளையாடும் மரணம்

எனது மரணம்

இருக்க இருக்கப் பெருக்கிறது.

சொற்ப காலத்திற்கு முன்னர்தான்

என் கண்முன்னே தெரியத் தொடங்கிய அது,

இப்போது

என் வாசலில்

வால் முறுக்கிய ஒரு கன்றுக்குட்டியைப்போல்

தினம் விளையாடிக் களிக்கிறது.

முதன் முதலாக என் கண்ணுக்கு தெரியும்போது அது

சிறு

எறும்பைப் போன்றுதான்

இருந்தது.

அதன் வளர்ச்சி

மிகவும்

வேகமான ஒன்று!

இந்தக் குறுகிய காலத்திற்குள்

அது வளர்ந்திருக்கும் விதம்,

பயங்கரம்!

மண்ணின் ராசி அப்படி, கேட்டீரோ!

கடலும் சுருங்கி ஒரு போத்தலுக்குள் ஊற்றி

மேசையிலே வைக்கும் அளவுக்கு,

அச்சம் நிறைந்த என் தரையில்

மரணம்;

மாடுமாதிரி என்ன,

யானையைப் போன்றும் கொழுக்கும்.

என் மரணம் இப்போது மிகவும் மகிழ்ச்சியுடன்

துள்ளி ஓடி வந்து

சற்று

விலகிக் கொண்டு போகிறது;

நான் - இன்று - பாவமென்று நினைத்திருக்கும்!

-----------------------------------------------------

அப்பாவிச் சனங்களின் சந்தை

அந்தச் சந்தை

பேயாகி அலைவதாக சொல்லப்படுகிறது,

நான் நம்பவில்லை.

ஊரின்

மூலையிலே நிற்கின்ற

பெரிய ஆலமரத்தில் அன்றிரவு

அந்தச் சந்தை

அலறிக் கொண்டு தூங்கியதாக,

நேற்றும் ஒருவர்

ஒரு பொது இடத்தில் கதைத்தார்,

நான் ஏற்கவில்லை.

போன வெள்ளிக்கிழமை

நான் படம்பார்த்து வரும்போது,

முச் சந்தியில் நின்று

அந்தச் சந்தை

மிகவும் உஷாராக இயங்கியதாகவும்,

அதை வளைத்து

மாடுகளும் ஆடுகளும் மேய்ந்ததைப் போலவும்,

தான் கண்டதாய்

அந்தப் பையன் சொன்ன கதையைக்கூட

என் மனம்

ஒரு பொருட்டாகத் தூக்கவில்லை.

மீன்பெட்டி எமனாகி

வெடித்துப் பறந்த சந்தையது.

எத்தனையோ உயிர்கள்

போன இடம்.

இருந்தாலும்,

அது பேயாய் அலைவதுவை

என்னால் இயலாது ஏற்க,

என்றிருந்தேன்;

அந்தப் பெண்மணி சொன்ன

கூவிக்கொண்டு சந்தை

இரண்டு வண்டிகள் சாமான் இறக்க அதற்குள்

போன புதன்கிளமை

நள்ளிரவுக்குப் பின்

கடற்கரை ஓரத்தில் குந்தி இருந்த

படலத்தைக் கேட்டபின்பும்.

-----------------------------------------------------

நிலவிற்குள் பாலூற்றுபவன்

முன்னர் வரும்போது

சுட்டதுதான் சூரியன்

பிறகு,

போதுமான அளவுக்குக் குளிர்

நான் நட்ட வெங்காயமும் இப்போது முளைக்கிறது,

உருளைக்கிழங்கு விளைகின்ற தரையாக

நான் சூரியனை மாற்றி விட்டேன்,

இடைக்கிடை வல்லாரை செய்வேன்.

நான் சூரியனில் வீடுகட்டி,

பசுமாடு வளர்ப்பதற்கு

இடமும் அமைந்து,

இதன் வாசியாய் ஆவேன் என்று

யார் நினைத்தது!

அண்மையில்தான்,

ஒரு கிணறு தோண்டினேன்.

மனிதன் வசிப்பதற்கு வசதியான சூழல்

இந்தச் சூரியனில் உண்டு.

ஒருநாள்

என் வெள்ளைப் பசு

மேய்ந்து போனபடியே

சூரியனின் விளிம்பிற்கு வந்தது

அப்போது அது உங்கள் நிலத்தை

பழைய ஞாபகத்தில்

எட்டிப் பார்த்திருக்க வேண்டும்;

உஷ்ணமடித்து முகம் கருகிக் கறுத்தது மாட்டிற்கு.

நேற்று,

நான் நட்டிருக்கும் கொய்யாவில்

ஓர் அணில் தாவுவதைக் கண்டேன்!

வண்ணத்துப் பூச்சிகளும் வரட்டும்,

கொதிக்கும் நிலத்தில் கிடக்காமல்.

பசுப்பால் குடிப்பதற்கு

ஆளில்லை!

நாங்கள் சூரியனில் நிரந்தரமாய் குடியேறிக்கொண்ட பின்பு

என் பசுக்கள்

பால் கறப்பது அதிகம்.

அன்றையப் பூரணையில்

நான் நிலவிற்குள்

அள்ளி அள்ளி ஊற்றினேன், பால்!

நான் பூமியில் இருக்கையில் என் கண்முன்னால் சரசமிடும்

அந்தக் காதலனும் காதலியும்

குளித்திருப்பர்.

-----------------------------------------------------

ஏழாவது உலகம் போனவன்

போனவன் போனவன் போனவன் போனவன்

வரவில்லை,

ஏழாவது உலகத்திற்கு!

இந்த முதலாவது உலகத்தில் என்னை

நடுத் தெரு ஒன்றில்

கொஞ்சம் நில்லென்றான்,

தான் வருவதாய்.

நின்றேன் நின்றேன் நின்றேன் நின்றேன்

இன்னும் நிற்கின்றேன்,

தன் அலுவல் முடிக்க

ஏழாவது உலகம் போனவன்

திரும்பவில்லை வெயிலின்,

தோள்பிடித்து இறங்கி,

அவன் போன

நான் கண்டறியாத அந்த உலகத்தில்

மடு, குட்டை, உண்டா!

அல்லது முதலைகளா?

வெள்ளைப் பெண்கள் நீலநிறக் கண்ணில்

பவனிவரும் பூதோட்டம்,

அவர்கள் அலுத்து

தம் வியர்வையினைத் துடைக்கும்

காகிதமாய் அவன் நெஞ்சு,

முறையே;

உண்டா? போச்சா? எனக்கொன்றும் விளங்கவில்லை,

வெயில் நிற்கப் போகிறது.

-----------------------------------------------------

புனரமைக்கப்பட்ட கடலருகு ஊர்

அழிந்தவர் போக; மிஞ்சி இருந்த மனிதர்களைத் தேடி

கொண்டுவந்து

பொய்ச் சிறகு கட்டிப்

பறக்கவிட்டிருந்தனர் மீண்டும் புனரமைக்கப்பட்ட

அந்தக் கிராமத்தில்.

காக்கைகளை

குருவிகளை

குயில்களை

அனைத்தையுமே;

வண்டையும் கூட,

புதியதும், தப்பிய பழையதுமாய், எங்கிருந்தோ

ஏற்றிவந்து

கொட்டி அந்தக் கிராமத்தின் முகத்தைக்

கீறி இருந்தனர் படமாய்,

வர்ணமில்லை!

அந்தக் கிராமத்தின் கடலை

முழுமையாய் இறைத்து

இரத்தம் கலந்திருந்த நீரை நீக்கி

நீல நீராய்

பார்வைக்கு பழையபடி

வைத்ததுதான் திறமை.

ஆனால் கடல்

சொல்லியே விட்டது;

இவர்கள்

என் அருகில் குடியிருந்த

பழைய மக்களே அல்ல.

அவர்கள்-

உரோமத்தால் பறந்தவர்கள்!

பெரிய பரந்த இங்குள்ள மரங்களிலும்

சிறிய புற்களிலும்

குந்தி மகிழ்ந்த பாரமற்ற ஆத்மாக்கள்!

அவர்கள், வளர்த்த நாய்கூட அப்போது

பக்கத்து ஊருக்கு தன் சகாவைத்தேடி

வால் முறுக்கி

எழுந்து பறந்தே போகும்.

அந்த ஊரின் மரக் கிளையொன்றில் குந்தி

இருந்து குரைத்தே

பேசும்.

ஆனாலும் ஓர் உதவி;

முகம் செத்து

விலா எலும்புகள் நோவிருந்தும்

நிலவு உடைந்து வானம் பொரிப்பறந்த

இந்த

அச்சம் நிறை ஊருக்கு

வாழ வந்தோர்க்காய்,

என் கரையில் நிற்கின்ற தென்னைகளைக் கேட்டுள்ளேன்

கூடுதலாய்

ஓலை வீச!

இவர்கள் குடிலமைக்க.

-----------------------------------------------------

அறையில் படுக்கும் மரங்கள்

என் மரங்களெல்லாம் அறைக்குள் வருகின்றன

வாசலில் நிற்கப் பயம்!

நெருப்பு உதிரும்.

கட்டிலின் அடியிலும்

கதிரையின் கீழுமாய்

ஒன்றின் மேலே ஒன்று கிடந்து

இரவைப் போக்க,

தங்கள் வேர்களைத் தாங்களே தூக்கி

மரங்கள் வருகின்றன,

கிளைகளைக்கூட மடித்து.

வாருங்கள் மரங்களே! அமருங்கள்! உறங்குங்கள்!

உங்களில் அடைந்த பறவைகளைக்கூட

கூட்டி வந்திருந்தால் சிறப்பு.

மெய்தான்; உங்கள் இலைகளில் இருந்த புழுக்கள் எங்கே?

கடல் எரிந்து மீன்கள் பொசுங்கும்

எமது இரவுகளில்

புழுக்களை நீங்கள் வெளியில் விடுதல்

என்ன நியாயம்?

இந்த இருளிலும் காகங்கள் பறக்கும்

அருமை மரங்களே!

எரியும் கடலுள் பொசுங்கும் மீனின்

சினைகளைக் கொத்த.

அதுசரி; என்று அறைக்குள் இடம் போதாது

என அறிந்தா,

பூமரங்களே நீங்கள் சொல்லுங்கள், உங்கள் வண்டுகளை

இதய வண்ணத்துப் பூச்சிகளை

கூட்டி வராமல் கன்னிகளைப் பூட்டி

திறப்பை

வண்டுகளிடமே கொடுத்துவிட்டு

படுக்கைக்கு வந்தீர்கள்!

பாவம் வண்டுகளும்

வண்ணத்துப் பூச்சிகளும்

மரங்கள் போய் அறையில் படுக்க

நெருப்பு உதிரும் தரையில்

இரவைக் கழிக்குமோ!

-----------------------------------------------------

சீறி ஓடாத வருங்கால மனித நதி

அந்த எழுதத் தெரியாத பையன்

இன்று என்னைச் சந்தித்தான்.

பெரிய பரிதாபத்தின் முழு மொத்த வடிவமாய்

என் முன்னே நின்றான்.

மீசைக்கு விதைதூவி இளமை மழை பெய்ய

பயிர் முளைத்த பருவம்.

ஏதோ, அலுவலுக்கு வந்திருந்தான்

கையொப்பம் இடு என்றேன்;

இடது கையின் பெரு விரலை ஊன்றி

வெட்கிச் சிரித்தான்

அது ஒரு செத்த சிரிப்பு.

என் இதயம் கழன்று

அவன் இட்ட

ஒப்பத்தின் மேல் விழுந்து

கத்தியது, பின் கருகிப்

பற்றியது.

அவன் காதல் உணர்வுகளை என்னென்று ஒருத்திக்கு

எழுதுவான் வருங்காலம்!

அழகு முகம்.

கீழுதடு,

இரத்தச் சிவப்பு

பெண் விழுவாள் இவற்றில் மயங்கி,

காகம்போல் அவன் விழுந்தவளின் வேலி ஓரமெல்லாம்

கரைந்து திரிவானோ.

எழுத வருகின்ற உணர்ச்சிகளை

ஒலியாக்கி!

வந்திருக்கக் கூடாது அவன் இன்று அலுவலுக்கு

எனக்கு

நிறைய வேலைகள் இருக்கின்ற தினம் இன்று

இனியென்ன?

நானில்லை!

அந்த எழுதத் தெரியாத வருங்கால மனித நதி

போனாலும், நான்

இருந்தபடி கதிரையிலே

உலகப் பாடசாலை அனைத்தையுமே நினைத்துவிட்டு

எண்ணுகிறேன்;

அந்த நதி வரும் நாளில்

சீறி ஒலியெழுப்பி பாய்ந்து ஓடாது,

உறையும் சிறு துளியாய்.

-----------------------------------------------------